அன்வார் இப்ராஹிமின் மன்னிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது – ஆர்.எஸ்.என். ராயர் பாராட்டு

கோலாலம்பூர்,

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நெகிரி செம்பிலானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பது மலேசிய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும் என பினாங்கு இந்து அறநிலைய வாரியத் தலைவர் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கடந்த காலத்தில் இந்துக் கோயில்கள் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்தால் இந்திய சமூகத்தின் மனம் புண்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, பிரதமர் இரு கைகளையும் கூப்பி மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டது உண்மையான அரசியல் தலைமைத்துவத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதுபோன்று பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் இந்திய சமூகத்திடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், ஹிண்ட்ராப் (HINDRAF) போராட்ட காலம் உட்பட பல்வேறு குறைகளை இந்திய சமூகம் முன்வைத்திருந்த போதிலும், முந்தைய ஆட்சிகளில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய சமூகத்தின் நலன், கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக மதானி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ராயர் கூறினார்.அதன்படி, MITRA-வுக்கான நிதி ஒதுக்கீடு RM100 மில்லியனில் இருந்து RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டதுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் AIMST பல்கலைக்கழகத்திற்கு RM76 மில்லியன் மற்றும் TAFE கல்லூரிக்கு RM20 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பிற்காக RM200 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதோடு, எஸ்.பி.எம். தேர்வில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.அமைச்சரவையில் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஆர். ராமணன் ஆகிய இரு இந்திய பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பதும் இந்திய சமூகத்திற்கு முக்கிய அங்கீகாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டபோதும், அன்வார் இப்ராஹிம் தனது கருத்துக்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு அதைத் திரும்பப் பெற்றிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ராயர் தெரிவித்தார்.

எனவே, பிரதமரின் மனப்பூர்வமான மன்னிப்பை இந்திய சமூகம் ஏற்று, கடந்தவற்றை மறந்து, மதானி அரசாங்கத்துடன் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய நேரம் இது என்றும் ஆர்.எஸ்.என். ராயர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here