தடுப்பு முகாம்களில் உள்ள 4,000 மியன்மார் நாட்டினரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பத் திட்டம்: அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 19 குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4,000 மியன்மார் நாட்டினரின் ஆவணப் பணிகள் நிறைவடைந்தவுடன், அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கெடா, பெல்டா புக்கிட் தங்காவில் நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லா இலக்குத் திட்டத்தின்’ செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மலேசியாவிலிருந்து 5,000 மியன்மார் நாட்டினரை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 19 தடுப்பு முகாம்களில் தற்போது சுமார் 22,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 4,000 மியன்மார் நாட்டினருக்கான ஆவணப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, அவர்கள் அனைவரும் ஒரே தடுப்பு முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் MKN) வழிகாட்டுதலுக்கு இணங்க, ‘அகதிகள் பதிவு ஆவண முறைமை’ (DPP) மூலம் மலேசியக் காவல் துறை மற்றும் குடிநுழைவுத் துறையினர் முழுமையான பின்னணி மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துவர் என்று அவர் சொன்னார்.

ஆவணப் சரிபார்ப்புகள் மற்றும் அகதி அந்தஸ்து தொடர்பான உறுதிப்படுத்தல்கள் நிறைவடைந்ததும், வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) மற்றும் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஒருங்கிணைப்போடு அவர்கள் கட்டம் கட்டமாகத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here