சிலாங்கூரில் அரசு நிலத்தில் இயங்கிய 72 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் இடித்துத் தள்ளியது ஷா ஆலம் மாநகராட்சி!

கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 72 தொழிற்சாலைகள் இந்த ஆண்டில் இடித்துத் தள்ளப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பான்மையான 53 தொழிற்சாலைகள், ஷா ஆலம் மாநகராட்சி (MBSA) மற்றும் பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருந்ததாகச் சிலாங்கூர் மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலாப் பிரிவுத் தலைவர் டத்தோ எங் சுய் லிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டத்தோ எங் சுய் லிம், ராயல் கிள்ளான் மாநகராட்சி (MDBK) மற்றும் கிள்ளான் மாவட்ட நில அலுவலக எல்லைக்குள் ‘ஓப்ஸ் ரதா’ (Op Rata) சிறப்புச் சோதனையின் மூலம் மேலும் 19 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கான சட்டப்பூர்வ நோட்டீஸ் விநியோகம், நிலத்தின் தகுதி ஆய்வு மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக்குப் பின்னரே இந்த இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, சொத்துகளை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து நிர்வாகம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இந்த இடிப்பு நடவடிக்கையானது சிறு தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களின் வருமானத்திற்கும் தற்காலிகப் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மாநில அரசிற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பெருமளவிலான இழப்புகளைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிறது என அவர் விளக்கமளித்தார்.

அரசு நிலங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதால், மாநில அரசிற்குச் சேர வேண்டிய நிலப் பிரீமியம் (Land premium), நில வரி, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் உரிமக் கட்டணங்கள் உள்ளிட்ட பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

மேலும் இத்தகைய உரிமமற்ற தொழிற்சாலைகள் (KTK) கட்டடப் பாதுகாப்பு இன்மை, தீ விபத்து அபாயம், சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையூறு மற்றும் சட்டவிரோத மின்சார/நீர் நுகர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

‘ஓப்ஸ் ரதா’ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படும் அரசு நிலங்கள், உள்ளாட்சி மன்றங்களின் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிலப் பயன்பாட்டுத் தகுதிக்கு ஏற்ப, எதிர்காலத்தில் மிகவும் சீரான மற்றும் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என டத்தோ எங் சுய் லிம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here