செப்டம்பர் 9-இல் தொடங்குகிறது 2026 அம்னோ பொதுப்பேரவை: WTCKL-இல் 4 நாட்கள் நடைபெற ஏற்பாடு!

கோலாலம்பூர்:

2026-ஆம் ஆண்டிற்கான அம்னோ (UMNO) கட்சியின் பொதுப்பேரவை வரும் செப்டம்பர் 9 முதல் 12-ஆம் தேதி வரை புத்ரா உலக வாணிப மையத்தில் (WTCKL) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 9-ஆம் தேதி அம்னோ தேசியத் தலைவரின் முதன்மை உரையுடன் பொதுப்பேரவை முறைப்படி தொடங்கும். அதைத் தொடர்ந்து மகளிர், இளைஞர் பிரிவு, புத்ரி மற்றும் புத்ரா ஆகிய அணிகளின் ஆண்டுக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்படும்.

கட்சி உறுப்பினர்களிடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தவும், தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தவும் இந்தப் பேரவை மிகச் சிறந்த களமாக அமையும் என அஷ்ராஃப் வஜ்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலாய்-பூமிபுத்ராக்களின் முதன்மையான ஆதரவு பெற்ற இயக்கமாக அம்னோவை மீண்டும் வலுவாகக் கொண்டு வர இந்தப் பொதுப்பேரவை வழிவகுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி (BN) மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here