ஜோகூரில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் விநியோகக் கும்பல் முறியடிப்பு: 2 பங்களாதேஷியர்கள் கைது; RM776,000 ரொக்கம் பறிமுதல்!

ஜோகூர் பாரு:

ஜோகூர் பாருவில் தொழிற்சாலைகளுக்குச் சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை விநியோகம் செய்து வந்த கும்பலைச் சேர்ந்த இரு பங்களாதேஷியர்களைக் குடிவரவுத் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து RM776,000-க்கும் அதிகமான ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு மாத காலப் புலனாய்வுக்குப் பிறகு, நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மூன்று இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமத் ருஷ்டி முகமத் தாருஸ் தெரிவித்தார்.

தற்காலிக வேலைவாய்ப்பு விசிட் விசாக்களைத் (PLKS) தவறாகப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்களை விநியோகித்த இரு பங்களாதேஷ் நாட்டு முக்கியப் புள்ளிகள் மற்றும் அவர்களுக்குக் கீழ் மேற்பார்வையாளர்களாக செயல்பட்ட ஒரு பங்களாதேஷி, ஒரு மியன்மார் நாட்டவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் சம்பளம் பெறுவதற்காக ஒரே வீட்டில் வெப்பமும் நெருக்கடியுமான சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியா, இந்தோனேசியா, மியான்மர் மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 20 முதல் 49 வயதுடைய 119 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த குமபளிடமிருந்து 450 தொழிலாளர்களின் சம்பளச் சீட்டுகள் அடங்கிய உறைகளில் இருந்த RM776,614 ரொக்கப் பணம், 2 கணினிகள், 2 பணம் எண்ணும் இயந்திரங்கள், காசோலை புத்தகம் மற்றும் ஒரு சொகுசு வாகனம் (SUV) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1959/63 குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1966 கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுரண்டும் சட்டவிரோத ஏஜென்ட்டுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனக் குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here