கிளந்தானில் சட்டவிரோத மரம் அறுக்கும் ஆலை அதிரடி சோதனை: RM600,000 மதிப்பிலான மரங்கள், இயந்திரங்கள் பறிமுதல்!

தானா மேரா:

கிளந்தான், தானா மேராவிலுள்ள கம்போங் புக்கிட் கெச்சிக் பகுதியில் உரிமமின்றி இயங்கி வந்த மரம் அறுக்கும் ஆலை ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், RM600,000-க்கும் அதிக மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்தோடு தொழிலாளி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 11:30 மணியளவில், தென்கிழக்கு படைப்பிரிவின் பொதுச் சேவைப் படையின் (GOF) 7-வது பட்டாலியன் படைவீரர்கள் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனையை மேற்கொண்டதாக அதன் தளபதி சிரேஷ்ட உதவி ஆணையர் அகமட் ராட்ஸி ஹுசைன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் 24 முதல் 60 வயதுடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 60 வயது நபர் ஆலையின் உரிமையாளர் என்றும், மற்ற மூவரும் அவரது தொழிலாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மர அறுப்பு இயந்திரங்கள், 2 குறுக்கு வெட்டு இயந்திரங்கள், 4,007 அறுக்கப்பட்ட மரத் துண்டுகள் (மதிப்பு: RM400,700) மற்றும் 107 மரக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த மரமறுக்கும் ஆலையின் உரிமையாளர் இயக்க உரிமத்தைக் காண்பித்தபோதிலும், மரங்களுக்கான உரிய வரிகளைச் செலுத்தியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்.

இவ்வாலை கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், தானா மேராவைச் சுற்றியுள்ள சிறு விவசாயிகளிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக மரங்களைக் கொள்முதல் செய்து குவாந்தான், பஹாங் மற்றும் மூவார், ஜோகூருக்கு அனுப்பி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல் நடவடிக்கைக்காகக் கோத்தா பாருவிலுள்ள கிளந்தான் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து 1984-ஆம் ஆண்டின் தேசிய வனவியல் சட்டம் பிரிவு 68(1)-ன் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here