கோலாலம்பூர்:
கேலாங் பத்தா அருகே உள்ள ஜாலான் தஞ்சோங் குப்பாங்கில் இன்று (ஆகஸ்ட் 28) காலை நடைபெற்ற கோர வீதி விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் லமன் செத்தியா உத்தாமாவில் காலை 8.40 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலது புறப் பாதைக்கு மாற முயன்ற ‘பேக்ஹோ’ (Backhoe) எந்திரத்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்த விபத்து நடந்ததாக இஸ்கந்தர் புத்ரி தீயணைப்பு நிலைய தளபதி முகமட் ஜாகி இஸ்மாயில் கூறினார்.
“காலை 8.40 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் காலை 8.51 மணிக்கு அவர்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்தனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
விபத்தில் பலத்த தலைக் காயமடைந்த 27 வயது இளைஞர், சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் குழுவினரால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை 9.35 மணியளவில் தீயணைப்பு படையினரின் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது என்று அவர் மேலும் கூறினார்.























