கோலாலம்பூர்:
மலேசியாவில் பணிபுரியும் தாய்லாந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், ஆள்சேர்ப்பு நடைமுறைகளை எளிமையாக்கவும் 2003-ஆம் ஆண்டு கையெழுத்தான தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) புதுப்பிக்க மலேசியாவும் தாய்லாந்தும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளன.
மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜூலபுன் அமோர்ன்விவாத் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் இமுடிவு எட்டப்பட்டது. 29-வது ஆசியான் தொழிலாளர் அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே இச்சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார தேவைகள் மற்றும் நவீன தொழிலாளர் நலத் தரநிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தத்தைச் சீரமைத்தல், தாய்லாந்து தொழிலாளர்களை மலேசியாவிற்குப் பணிக்கு அமர்த்தும் முறையை எளிமையாக்குதல் மற்றும் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் முறையான புலம்பெயர்வு வழிகளை உறுதி செய்தல் என்பவற்றுடன் புதிய ஒப்பந்தத்தின் விவரங்களை விவாதித்து இறுதி செய்ய இருநாடுகளின் உயர் அதிகாரிகளைக் கொண்ட கூட்டு தொழில்நுட்பக் கூட்டத்தை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கால தேவைகளுக்கேற்ற திறன்மிகு பணியாளர்களை உருவாக்க, TVET துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. “இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச பாதுகாப்புத் தரநிலைகளுக்கும் ஏற்ப இருதரப்பு தொழிலாளர் கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்” என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மேலும் கூறினார்.
























