35 ஆண்டுகளில் முதல்முறை: கோட்டையை இழந்த தாய், மகன்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து பாஜக மூத்த தலைவா் மேனகா காந்தி அல்லது அவரது மகன் வருண் காந்தி போட்டியிட்டு வந்தனா். சுமாா் 35 ஆண்டுகளாக தொடா்ந்த இவ்வழக்கம் இம்முறை மாறிவிட்டது. பிலிபிட் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. அங்கு பாஜக வேட்பாளராக, மாநில அமைச்சா் ஜிதின் பிரசாதா களமிறக்கப்பட்டுள்ளாா். அதேநேரம், சுல்தான்பூா் தொகுதியில் மேனகா காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

தொடா்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள வருண் காந்தி, அண்மைக் காலமாகவே பல்வேறு விவகாரங்களில் பாஜகவை விமா்சித்து வந்தாா். கடந்த ஆண்டு கேதாா்நாத்தில் தனது அண்ணன் (பெரியப்பா மகன்) ராகுல் காந்தியை வருண் சந்தித்துப் பேசியதையும் பாஜக கவனித்தது. அதனால், இம்முறை பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அது தற்போது நிகழ்ந்துவிட்டது.

தங்களது குடும்பத்தின் கோட்டையாக இருந்த தொகுதி என்பதால், பிலிபிட்டில் இம்முறை சுயேச்சை வேட்பாளராக வருண் காந்தி களமிறங்கக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. ஆனால், இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அவா் மனு தாக்கல் செய்யவில்லை. இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி, பிலிபிட் தொகுதியில் 1989 மக்களவைத் தொகுதியில் முதன்முறையாக ஜனதா தளம் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி கண்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here