வாடகை வீட்டின் அறையிலிருந்து 19 வயது பாலிடெக்னிக் மாணவி சடலமாக மீட்பு – காதலன் கைது!

கோலாலம்பூர்:

குவாந்தான், ஜாலான் ஆயிர் புத்தே 2 பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், 19 வயதான ‘பொலிடெக்னிக் சுல்தான் ஹாஜி அகமட் ஷா’ மாணவி எம். எலிசா ஜோனோவா செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:32 மணியளவில் மாணவியின் காதலன் அவசர உதவி எண்ணை அழைத்துத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டின் தரைத்தளத்தில் உள்ள வாடகை அறையின் கட்டிலில் மாணவி சடலமாக இருந்ததைக் கண்டறிந்தனர்.

குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனை தடயவியல் நிபுணர்களின் முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த மாணவியின் கழுத்தில் அழுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சம்பவ இடத்தில் இருந்த மாணவியின் 19 வயது காதலனைக் காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரி கல்வித் துறை (JPPKK) இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த முழு அதிகாரத்தையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிர்வாகம், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் வீண் வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here