தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது-டத்தோஸ்ரீ புலவேந்திரன் 

கவின்மலர்

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நமது மாணவர்களால் மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய  உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் நினைவுறுத்தினார்.பிறமொழி பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான நமது மாணவர்கள் தங்கள் தாய்மொழி தமிழை இழந்துவிடுகின்றனர்.தாய்மொழியை இழப்பது என்பது வெறும் மொழியை மட்டும் இழப்பதல்ல.

மாறாக  நமது கலை,கலாச்சாரம்,பண்பாடு மரபியல் கூறுகள் என்று பாரம்பரியமாக காக்கப்பட்டு வரும் அனைத்தையும் படிப்படியாக இழப்பதாகும். இங்கு திரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் 44ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அவர் உரை நிகழ்த்தினார்.குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியான போதும் இப்பள்ளி மாணவர்கள் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கு TRIO B எனும் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் புத்தக மதிப்பாய்வு திட்டத்தில் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பங்கேற்றதன் வழி பெற்றுள்ளனர்.நுண்ணறிவு இயந்திரவியல் போட்டியில் தங்கம் வெண்கலம் ஆகிய பரிசுகளையும்,  காற்பந்து போட்டியின் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் முதல் நிலையிலும் வெற்றி பெற்றுள்ளனர். பெண்களுக்கான காற்பந்து போட்டியில் நான்காவது நிலையில் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தகைய சாதனைகளைப் படைத்ததுடன் மலாய், ஆங்கில மொழிகளில் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க தனி கவனம் செலுத்தியும் கூடுதல் முயற்சிகளை இப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டும் வருகின்றனர். நமது பிள்ளைகளின் முன்னேற்றத்தில் இத்தகைய அக்கறையையும் அரவணைப்புகளையும் தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே காண இயலும் என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் புகழ்ந்துரைத்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் கார்த்திக் மாரி சிறப்புரையாற்ற.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இடைக்காலத் தலைவர் திருமதி ஷிலா தனபால் தலைமை வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here