ஒடிஷா முதல்வராகப் போவது யார்? தமிழரா? அமித்ஷாவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்த விகே பாண்டன்

புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 9-ந் தேதி தாம் முதல்வராகப் போவது இல்லை; ஒடிஷாவின் மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்தான் முதல்வராவார் என அவரது செயலாளர் விகே பாண்டியன் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷா தேர்தல் களத்தில் இந்த முறை ‘தமிழரை’ இலக்கு வைத்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருப்பவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன். ஒடிஷாவின் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலமும் விகே பாண்டியன் என்றே கூறப்படுகிறது. இதனால் விகே பாண்டியனை டார்கெட் செய்து மோடி, அமித்ஷா பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பேசுகையில், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறை சாவி தமிழ்நாட்டுக்குக் கொண்டு போய்விட்டார் விகே பாண்டியன்; ஜெகந்நாதர் கோவில் கருவறை சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றார். இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஒடிஷாவை ஒரு தமிழர் ஆளலாமா? என நேற்று கூட பிரசாரம் செய்தார். மோடி, அமித்ஷாவின் இந்த பிரசாரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மே 30,31ல் தமிழ்நாடு வருகை தரும் மோடி- அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

இதனிடையே தம் மீதான தொடர் விமர்சனங்களுக்கு விகே பாண்டியன் அளித்த பதில்: ஜூன் 9-ந் தேதி இந்த மண்ணின் மைந்தர் மீண்டும் ஆட்சியில் அமருவார். ஒரியா மொழி பேசுகிறவர் மட்டுமல்ல.. ஒடிஷா மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர்தான் ஒடிஷாவின் முதல்வராவார் (நவீன் பட்நாயக்). ஜூன் 9-ந் தேதி முற்பகல் 11.30 மணி முதல் பகல் 1 மணிக்குள் மண்ணின் மைந்தரே ஒடிஷாவின் முதல்வராகப் பதவியேற்பார்.முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது.

மிகவும் திறமையான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நக்சலைட்டுகளை ஒடுக்கியதில் இரு அதிகாரிகளும் முக்கியப் பங்கு வகித்தவர்கள். இருவரது சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகள் பெறக் கூடியவர்கள். பிஜூ ஜனதா தளத்திடம் தோல்வியடைவதை தாங்கிக் கொள்ள முடியாத பாஜகதான் இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கிறது. இவ்வாறு விகே பாண்டியன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here