காஜாங்:
ஏழு வயது சிறுமியின் மரணம் தொடர்பாக ஒரு திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயக்கமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை 38 வயது மற்றும் 40 வயதுடைய அச்சிறுமியின் பெற்றோர், நேற்று (ஜனவரி 29) அதிகாலை 1.11 மணிக்கு காஜாங் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
உடனே பாதிக்கப்பட்ட சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துவிட்டதாகவும் மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடலில் துஷ்பிரயோகத்திற்கான பழைய மற்றும் புதிய அறிகுறிகள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும், “மரணத்திற்கான காரணம் ஒரு மழுங்கிய பொருளால் ஏற்பட்ட காயம்” என்றும் அவர் இன்று (ஜனவரி 30) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“கொலைக்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் நாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.





















