பெர்லிஸில் RM13 மில்லியன் மதிப்புள்ள 365 கிலோ சியாபு போதைப்பொருள் பறிமுதல்

கங்கார்:

நேற்று பாடாங் பெசார் அருகே உள்ள பெசாரியில் உள்ள கம்போங் பெலாட் பத்துவில் பெர்லிஸ் போலீசார் நடத்திய சோதனையில், RM13.14 மில்லியன் மதிப்புள்ள 365 கிலோ சியாபு (மெத்தாம்பேட்டமைன்) பறிமுதல் செய்ததுடன், 40 வயதுடைய ஒருவரையும் கைது செய்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாலை 3.30 மணிக்கு பெர்லிஸ் காவல் துறை தலைமையகத்தின் (IPK) போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (JSJN) ஒரு போலீஸ் குழுவால் போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, சந்தேக நபர் புரோட்டான் வாஜா காரில் இருந்து இறங்கி, டொயோட்டா வியோஸ் காரை நோக்கிச் செல்வதைக் கண்டதாக அவர் கூறினார்.

“டொயோட்டா வியோஸ் காரில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், தாய்லாந்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய 17 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று பெர்லிஸ் IPKயில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்டபோதைப் பொருள் 3.6 மில்லியன் போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக முஹமட் கூறினார்.

அந்த நபரின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் அவருக்கு மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறியப்பட்டது என்றும், அவர் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான கடந்தகால குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.

“சந்தேக நபர் ஜூன் 1 (நேற்று) முதல் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த வழக்கு 1952 ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. விசாரணையில் உதவுவதற்காக தப்பி ஓடிய மற்றொரு சந்தேக நபரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here