கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பேரப்பிள்ளையின் புக்கிட் லெடாங் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
“இந்த மூவரில் வீட்டில் பணியாற்றும் பாதுகாவலர் மற்றும் வீட்டுப்பணியாளர் உள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்கிறது,” என கோலாலம்பூர் செயல்பாட்டுத் தலைமையக காவல் துறை தலைவர் டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் கூறினார்.
முன்னதாக, இந்த வீடு உடைக்கப்பட்டு, அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த RM 1.8 மில்லியன் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வீட்டுப்பணியாளர் மூலம் கண்டறியப்பட்டது. அப்போது பின்வழி வாசல் உடைக்கப்பட்டிருந்ததையும், அறையிலுள்ள பொருட்கள் வீசப்பட்டிருந்ததையும் பார்த்ததும் போலீசாருக்கு புகார் அளித்தமை குறிப்பிடத்தக்கது.





















