சிங்கப்பூரில் பதின்ம வயதுத் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் பதின்ம வயதில் தாயான சிறுமிகளின் எண்ணிக்கை 228 என பதிவாகியுள்ளது. இது 2022ஆம் ஆண்டின் 218 என்ற எண்ணிக்கையை விட அதிகம் என சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்ட பிறப்பு மற்றும் இறப்புத் தரவுகள் தெரிவித்துள்ளன.

ஒரு சிறுமி 15 வயதில் தாயானார். உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயின்றபோது தாயாரின் கடும் எதிர்ப்பு, முன்னாள் துணைவரின் ஆதரவு இல்லாமை ஆகிய காரணங்களால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

“முதலில் கருக்கலைப்பு செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மருத்துவ பரிசோதனையின் போது என் குழந்தையைப் பார்த்ததும், அதே கணத்தில் அவளுடன் ஒரு வலுவான பிணைப்பு உருவானது. குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, என் தவறுக்கு நான் பொறுப்பு எடுக்க வேண்டியதுதான்,” என்று அவர் கூறினார்.

இந்த சிறுமி போன்ற பல பதின்ம வயது பெண்கள் இன்று தாயாகி வருவதாக, 2024 ஜூன் 15ஆம் தேதி வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கோவிட்-19 காலத்தில் பல பதின்மவயதினர் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வோடு இருந்தனர். அவர்கள் பலர் மன அழுத்தம், பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல்களில் இருந்ததால், உணர்வுப் பிணைப்பைத் தேடி பாதுகாப்பற்ற உடலுறவுகளில் ஈடுபட்டிருக்கக்கூடும்,” என பதின்ம வயது கர்ப்பிணிகளுக்கு ஆதரவளிக்கும் Babes Pregnancy Crisis Support Ltd அமைப்பின் நிர்வாக இயக்குநர் மெலிசா வோங் விளக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here