கோலாலம்பூர், அக்டோபர் 16 –
ஏழு தேசிய வீரர்களின் தகுதியைப் பாதிக்கும் ஆவணச் சிக்கல்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து, மலேசிய கால்பந்து சங்கம் (FAM), ஃபிஃபா-விடம் (FIFA) அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளது.
சங்கத்தின் தலைவர் யூசோப் மாஹாடி இது குறித்துப் பேசுகையில், அக்டோபர் 7-ஆம் தேதி ஃபிஃபா-வின் முழுத் தீர்ப்பைப் பெற்ற உடனேயே, FAM சட்டக் குழுவினர் தாமதமின்றிச் செயல்பட்டு, தேவையான அனைத்து மேல்முறையீட்டு ஆவணங்களையும் தயாரித்துச் சமர்ப்பித்தனர் என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, தங்கள் விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதிலும், நடைமுறை நியாயத்தை நிலைநாட்டுவதிலும் மலேசிய கால்பந்து சங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் தேசிய கால்பந்து நலன்களைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை வழங்கும் வகையில், ஃபிஃபா இந்த விவகாரத்தைச் சாதகமாக மறுஆய்வு செய்யும் என்று FAM நம்புகிறது.





















