ஆறு மணி நேரத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட அரசு ஊழியர்: 99,276 ரிங்கிட்டை இழந்த சோகம்!

கோலா திரெங்கானு:

டெலிகிராம் செயலியில் வந்த கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரங்களை நம்பி, திரெங்கானுவைச் சேர்ந்த 38 வயது பெண் அரசு ஊழியர் ஒருவர் சுமார் 99,276 ரிங்கிட் பணத்தை ஏமாந்துள்ளார்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு மோசடித் திட்டங்களில் அவர் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி, டெலிகிராம் செயலி வழியாக ‘வெபுல்’ என்ற முதலீட்டுத் திட்ட விளம்பரத்தை அந்தப் பெண் பார்த்துள்ளார். வெறும் 6 மணி நேரத்தில் பெரும் லாபம் ஈட்டலாம் என்ற வாக்குறுதியை நம்பி, அவர் முதலில் 1,000 ரிங்கிட் செலுத்தியுள்ளார்.

பின்னர், லாபத் தொகையை எடுக்க வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் அவரை மூளைச்சலவை செய்துள்ளது.

இதனை நம்பி, மே 1 முதல் மே 7 வரையிலான காலகட்டத்தில், 12 தவணைகளாக மொத்தம் 48,965 ரிங்கிட் தொகையை நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

முதல் திட்டத்தில் சிக்கியிருந்த நிலையிலேயே, மே 11-ஆம் தேதி ‘சன்வே டிரேட்’ என்ற மற்றொரு திட்டத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார். இதில் 30 நிமிடங்களிலேயே லாபம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டுள்ளது.

அதை நம்பி மூன்றே நாட்களில் 10 வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் மொத்தம் 50,311 ரிங்கிட் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

கடைசியாக, “கூடுதல் செலவினங்கள்” என்ற பெயரில் மீண்டும் 38,527 ரிங்கிட் பணம் கேட்கப்பட்டபோதுதான், தான் ஏமாற்றப்படுவதை அந்தப் பெண் உணர்ந்தார்.

உடனடியாக நேற்று மதியம் 2.40 மணிக்கு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முஹம்மத் நூர் கூறுகையில், “இந்த மோசடி குறித்து தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் (ஏமாற்றுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” எனத் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் வரும் “குறைந்த நேரத்தில் அதிக லாபம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here