சங்கரன்கோவில் – கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு காட்சி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ண நாதர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11ம் திருநாளான கடந்த 6ம் தேதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 13ம் திருநாளான நேற்று ஆவணித்தபசில் ஒப்பனையம்மாளுக்கு மாலையில் முகலிங்கர் வடிவமாகவும், இரவில் பால்வண்ணநாதராகவும், சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் ஆவணி தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், முகலிங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு அம்பாள் தபசு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து மாலை 6.35 மணிக்கு ஒப்பனை அம்மாளுக்கு முக லிங்கநாதர் வடிவமாக ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு 10.30 மணிக்கு யானை வாகனத்தில் பால்வண்ணநாதர் ஆக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கோயில் துணை ஆணையர் செல்லதுரை, கோமதியம்மாள் மாதர் சங்க தலைவர் பட்டமுத்து, சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னம் பாலிப்பு குழு துணை தலைவர் ஆறுமுகம், பாஜ மாவட்ட பொது செயலாளர் பாலகுருநாதன், பாஜ ஒன்றிய பொது செயலாளர் சண்முகவேல், டாக்டர் ராதிகா (எ) பேச்சியம்மாள், சுப்பிரமணியன், அய்யனார், 13ம் திருநாள் மண்டகப்படியை சேர்ந்த ராம்குமார், வேணுகோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். விழாவின் கடைசி நாளான 14ம் திருநாளான இன்று சுவாமி, அம்பாள் சப்தா வர்ணத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.