கோலாலம்பூர் –
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயாவைச் சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பித்தது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் என்று மரண தண்டனைக் கைதி அஸிலா ஹட்ரி பரபரப்பான வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். நஜிப், அவரின் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டா ஆகியோர் உத்தரவிட்ட காரணத்தினால்தான் அல்தான்துயாவைக் கொலை செய்ய முடிவுசெய்தோம் என்றார் அஸிலா.
கடந்த 2006 அக்டோபர் 19ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து மறுநாள் அக்டோபர் 20 பின்னிரவு 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் லோட் 12843, முக்கிம் புக்கிட் ராஜா, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் எனுமிடத்தில் மிகக் கொடூரமான முறையில் அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் செக். 34, செக். 302 ஆகிய விதிகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. அல்தான்துயா படுகொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அஸிலா ஹட்ரி, சீருல் உமார் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 2008 அக்டோபர் 31ஆம் தேதி அவரை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலைசெய்தது.
ஆனால், அஸிலாவும் சீருல் உமாரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்று 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
ஆனால், மரண தண்டனையை எதிர்த்து அந்த இருவரும் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். இந்நிலையில் காஜாங் சிறையில் இருந்த வண்ணம் ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை வழங்கியிருக்கிறார் அஸிலா.
கடந்த 2006 அக்டோபர் 17ஆம் தேதி அப்போது துணைப்பிரதமராக இருந்த நஜிப்பைச் சந்திக்கும்படி காவல்துறை அதிகாரி டிஎஸ்பி மூசா என்னைக் கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து பகாங், பெக்கான் நகரில் உள்ள ஸ்ரீ கெனாங்கான் எனுமிடத்தில் நஜிப்பைச் சந்தித்தேன். அந்தக் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது மூசா.
“கோலாலம்பூரில் உங்களுக்கு ஒரு முக்கியமான கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கின்ற ஒருவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும்” என்று எனக்கு உத்தரவு பிறப்பித்தார் நஜிப்.
ஒரு வெளிநாட்டுப் பெண்மணி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரால் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் மிரட்டல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்த உளவாளியைக் கைதுசெய்து அழித்துவிட வேண்டும். அதாவது சுட்டுத்தள்ள வேண்டும்.
அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த உளவாளியின் உடலில் வெடிமருந்துகளைக் கட்டிவைத்து வெடிக்கச் செய்ய வேண்டும் என்றும் நஜிப் எனக்கு உத்தரவிட்டார்.
அதனை அடுத்து மறுநாள் கோலாலம்பூருக்குத் திரும்பினேன். 2006 அக்டோபர் 19ஆம் தேதி இரவு பெட்டாலிங் ஜெயா மாவட்டம், முக்கிம் புக்கிட் ராஜா எனுமிடத்தில் அல்தான்துயாவை நானும் சீருல் அஸஹாரும் சுட்டுக்கொன்றோம்.
மேல் நிலைத் தலைவரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்தக் காரியத்தைச் செய்தோம். இதனால் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 1960ஆம் ஆண்டு சத்தியப்பிரமாண வாக்குமூலம் பிரகடனத்தின் வழியாகக் கேட்டுக் கொள்கிறேன். கூட்டரசு நீதிமன்றம் என் மனுவை உடனடியாக மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த உண்மையைத் தெரிவிக்கிறேன் என்றார் அஸிலா -மலேசியா கினி.