மஸ்லீ விலகினார்!

புத்ராஜெயா –

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக் கொள்கிறேன் என்று டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார். பிரதமரின் ஆலோசனையை ஏற்று நான் இந்த முடிவை எடுத்தேன் என்று நேற்று புத்ரா ஜெயாவில் மாலை 4.30 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று பிற்பகலில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை அவர் சந்தித்துப் பேசினார். தமது பதவி விலகல் குறித்து அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

“எனது தந்தையைப் போன்றவர் மகாதீர். அனுபவம் வாய்ந்த அரசியல் தந்திரி. அவரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பதவியைத் துறக்க முடிவு செய்தேன். என் முடிவை மகாதீரிடம் தெரிவித்தேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.நாட்டின் நலனுக்காக இந்த முடிவை எடுத்தேன். பிரதமர் மகாதீருக்கு நான் விசுவாசமாக இருப்பேன்” என்றார் மஸ்லீ மாலிக்.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலின்போது ஜோகூர் மாநிலம் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மஸ்லீ மாலிக். நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் அவர் கல்வி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த 20 மாதங்களில் அவரின் பல செயல்பாடுகள் சர்ச்சையைை எழுப்பின. கல்வி அமைச்சராக வந்தவுடன் இனி பள்ளிகளில் வெள்ளை காலணிகளுக்குப் பதிலாக கறுப்பு காலணிகளை அணிய வேண்டும் என்று அவர் விடுத்த முதல் உத்தரவு பலரைச் சீற்றமடையச் செய்தது. பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மெட்ரிகுலேஷன் தேர்வில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கான இடங்களை அவர் குறைத்ததும் பலரை வெறுப்படையச் செய்தது.

பினாங்கிலுள்ள ஆரம்ப சீனப்பள்ளிகளில் ஒரு கேலிச்சித்திரப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது. அது கம்யூனிசத்தையும் சொங்லிங் கொள்கையையும் ஊக்குவிப்பதாகக் கூறி அதற்கும் அவர் தடைவிதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆகக் கடைசியாக தாய்மொழிப்பள்ளிகளில் ஜாவி எழுத்து போதனை கட்டாயமாக்கப்படுகிறது என்று அண்மையில் அவர் அறிவித்ததும் இந்தியர்கள், சீனர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here