ஒலிம்பிக் தீபத்தை பெற சிறப்பு விமானம் புறப்பட்டது

டோக்கியோ,மார்ச் 19-

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

கொரோனா வைரசின் கோரப்பிடி உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை உருவாக்கி விட்டதால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று அவ்வப்போது சர்ச்சை கிளம்புகிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் உறுதியுடன் இருக்கிறோம்.

இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எந்த கடினமான முடிவும் (ரத்து அல்லது தள்ளிவைப்பது) எடுக்கப்போவதில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனாலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் சிறப்பு விமானம் நேற்று கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டது. முதலில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பயத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை.

ஏற்கனவே கிரீசுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்று தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு திரும்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here