கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்குவதா?

கோலாலம்பூர் –

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பஸ் நடத்துநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் ஓட்டுநர்கள் சார்பில் வான் ஷய்ரி பின் வான் அகமட் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்கை ஆற்றிவரும் சுற்றுலாத்துறை இன்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

சுற்றுலாச் சேவைத்துறை 2018இல் நாட்டின் பொருளாதாரத்திற்கு 52.96 விழுக்காட்டுப் பங்கினை ஆற்றியுள்ளது. சுற்றுலாத்துறை 13.3 விழுக்காடு பங்கினை ஆற்றியது.
உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறை பிரச்சினைகளை எதிர்நோக்கிவந்துள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் நம் அனைவரையும் விழிக்கச் செய்திருக்கின்றது என்று அவர் சொன்னார்.

சுற்றுலா பஸ்களுக்குச் சில வங்கிகளே கடன் கொடுக்கின்றன. ஆனால், 95 விழுக்காட்டு சுற்றுலா பஸ் நடத்துநர்கள் கிரேடிட் நிறுவனங்களையே நம்பியிருக்கின்றனர்.

5 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பஸ்களுக்கான கடனுக்கு கிரேடிட் நிறுவனங்கள் 4 முதல் 10 விழுக்காட்டு வட்டியை விதிக்கின்றன. ஆனால், 5 லட்சம் வெள்ளி மதிப்புடைய சொகுசு வாகனங்களுக்கு 2 முதல் 3 விழுக்காடு வட்டியில்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன.

கிரேடிட் நிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதால் சுற்றுலா பஸ்களுக்கு மாதம் 10 ஆயிரம் வெள்ளி முதல் 14 ஆயிரம் வெள்ளி வரை தவணைப் பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால், 5 லட்சம் வெள்ளியில் சொகுசு கார்களை வாங்குவோர் வங்கிகளுக்கு 5 ஆயிரம் வெள்ளி முதல் 7 ஆயிரம் வெள்ளி வரைதான் மாதத் தவணைப் பணம் செலுத்துகின்றனர்.

இந்த வேறுபாட்டை அரசாங்கம் கருத்தில்கொண்டு எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதை வங்கிகள் 6 மாதங்கள் ஒத்திவைத்துள்ளன. ஆனால் கிரேடிட் நிறுவனங்கள் 2 முதல் 3 மாதங்களே கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்துள்ளன.

இதனால் 80 விழுக்காடு சுற்றுலாப் பஸ் நடத்துநர்கள் திவாலாகும் நிலை உள்ளது. ஆகவே கிரேடிட் நிறுவனங்கள் சுற்றுலா பஸ்களுக்குக் கொடுத்த கடனை எஸ்எம்இ பேங்க் அல்லது பிஎஸ்என் வங்கிகள் போன்ற அரசாங்க வங்கிகளுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதமே விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பஸ் நடத்துநர்களின் சுமை குறையும் என்று அவர் கூறினார்.

இன்றைய நிலையில் தினசரி கிரேடிட் நிறுவனங்கள் பஸ் நடத்துநர்களுக்குத் தொலைபேசி அழைப்பைச் செய்து கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்குதல் கொடுக்கின்றன. வருமானம் இல்லாத நிலையில் பணத்திற்கு நாங்கள் எங்கே போவோம் என அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here