அந்நியப் பிரஜைகள் வியாபாரம் செய்வதற்கு அனுமதியில்லை – சிலாங்கூர் அரசு அதிரடி

அந்நியப் பிரஜைகள் இனி வியாபாரம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கும் சிலாங்கூர் மாநில அரசின் முடிவை வரவேற்கிறோம். இந்த முடிவு வெற்றிக்கரமாக அமல்படுத்தினால் உள்ளூர்வாசிகளின் பொருளாதாரம் ஏற்றம் காணும்.

அண்மையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உற்றுப்பினரும் மாநில தொழில் முனைவர் மேம்பாட்டுக் குழுத்தலைவருமான ரோட்ஸியா இஸ்மயில் குறிப்பிட்டிருப்பது போல் அந்நியப் பிரஜைகள் வியாபார லைசென்ஸ் பெறுவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் வேலையாட்களாக செயல்படுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உள்ளூர் பெண்மணியின் கணவராக இருந்தாலும் மற்றவர்களின் வியாபார பிரதிநிதி என்றோ, வேலையாட்கள் என்றோ காரணம் சொல்ல முடியாது. உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வியாபார லைசென்ஸ் வழங்கவேண்டும். வேலையாட்களின் முழு விவரங்களும் பதிவு செய்ய வேண்டும். பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொள்ளும் பயோமெட்ரிக் முறையில் முழுவிவரங்களை பதிவு செய்த பின்னர் லைசென்ஸ் வழங்க வேண்டும்.

தற்போது காளான்கள் போல் பூத்துக்கிடக்கும் அந்நியப் பிரஜைகளின் சட்டவிரோத கடைகளால் உள்ளூர்வாசிகள் அவர்களுடன் போட்டி போட்டு சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

பெரும்பாலானவர்கள் வியாபார லைசென்ஸ் இன்றி கடைகள் நடத்துவதும் வீடமைப்புப் பகுதிகளில் கோழி, மீன் கடைகள் வைத்து சுத்தம் செய்வதும் உணவகங்களை வைத்து ஆபத்தான முறையில் சமைப்பதும் குடியிருப்பாளர்களுக்கு பெரும் பிரச்சினையை கொடுத்து வருகிறது. ஊராட்சி மன்றங்கள் சில வேளைகளில் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டாலும் சில நாட்களில் அவர்கள் மீண்டும் செயல்பட தொடங்கி விடுகின்றனர்.

எனவே, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஷியா இஸ்மாயில் எடுத்திருக்கும் இந்த அதிரடியான முடிவு பாராட்டுக்குரியது. தொடர்ந்து தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் அந்நியப் பிரஜைகளின் கொட்டம் இதன்வழி அடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here