மன அமைதி அளிக்கும் மகான்களின் ஜீவ சமாதிகள்

‘சமாதி’ என்பதற்கு ‘ஆதி இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை மீண்டும் அவருடன் சமம் செய்தல்’ என்று பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மகான்கள், சாதுக்கள் ஆகியோர் சித்தம் என்னும் உணர்வு அறிவு மூலம் கடுமையான ஒழுக்கம் மற்றும் உயர்ந்த தவமுறைகளை பின்பற்றி உடலையும், உள்ளத்தையும் காக்கின்றனர். சமாதி என்பது இறைவனால், ஒரு மகானுக்கு என்று நியமிக்கப்பட்ட காரியங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்த பின்னர் முக்தி அடைவதாகும். அதாவது, அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றும் இந்த பூமியில் இருக்கும்படி செய்து விட்டு ஆதி நிலையில் ஒன்றாக மாறுவதாகும். அந்த நிலையில், மகான்களின் உடல் மற்றும் மன இயக்கங்கள் நின்று விட்டாலும் உயிர்த்தன்மை அந்த உடலை விட்டுப் பிரிவதில்லை என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் ஆகிய ஆறு பிரிவுகளில் வழிபாட்டு சம்பிரதாயங்கள் இருக்கும் நிலையில் மகான்களை சமாதி செய்விக்கும் முறைகளும் அதற்கேற்ப அமைந்திருக்கும். உடலுடன் வாழ்ந்த காலத்தில் இறைவனை உணர்ந்த மகான்கள், அவர்களது சம்பிரதாய முறைப்படி சமாதியில் வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மகான்களின் ஜீவசமாதிக்கு சென்றால் மனம் அமைதி பெறுவதாகவும், சற்றே கூர்ந்து கவனித்தால் அங்கே இருக்கும் நல்ல அதிர்வலைகளை உணரலாம் என்றும் பக்தர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here