எண் ஏழு துருவமவள்

விடியல் காண விழி இரண்டு,

விழித்ததுவே வாழ பல்லாண்டு,

வையம் புகழ தரித்ததுதான் கருவறை கோவில்,

வைடூரியமாம் மதலையவள் அம்மறுகில்

 

அவதரித்தது பெண் பாலென கயவர் அறிய,

அவதூரென எண்ணினர் பெண் குலம் சரிய,

கள்ளிப்பால் பிடியில் தப்பியவள் தான் எத்துணை,

கல்லாதார் அறிவாரோ பேதையினரு மைத்துணை

 

தாய் வழி பிறந்தவரை தன்னலமற்று மதிப்பாள்,

தாய்மையோடுதான் தமக்கையவள் நடப்பாள்,

உண்ண உணவும் உடுத்த உடையும் வேண்டாதவள்,

உள்ளத்தில் ஊனமின்றி உபசரிக்கும் பெதும்பையவள்

 

துனியினைக் கண்டவள் கல்விதனை நோக்காள்,

துணிவினைக் கொண்டு பணியொன்று செய்வாள்,

கொடுந்துயரினும் குடும்பமே கதியாவாள்,

கொண்கனுக்கு நிகரென மங்கையவள் ஆளுவாள்

 

பாவையவள் பதின்ம வயதை எட்ட,

பார்வை முழுதும் கனவுக் கயிற்றில் கட்ட,

அல்லல்பட அரக்கர்கள் கொடுமை புரிந்ததுவே,

அடல் கொண்டு மடந்தையவள் காத்ததுவே

 

செப்பமுடைய நெஞ்சத்தோடு வாழ்வில் முன்னேற,

செருக்கீட்ட செய்யவள் தினந்தினம் துயருற,

பெண்ணியம் காப்பவளை அடங்காதவள் என்றே,

பெறுதியொன்றும் இல்லையென அரிவையவள் வென்றே

 

பேறு பெறாதனை கேலி பலர் செய்தார்,

பேதைமை உள்ளம் நொடியுமென எண்ணாதார்,

பிரசவத்தின் வலியைதான் அகிலந்தனில் அறிவாருண்டோ ?

பிறப்பிலிருந்து வதையாத தெரிவையவள் உண்டோ ?

 

கூனி குறுகி நடந்தாலும் கூற்றுவனுக்கு அஞ்சாதவள்,

கூந்தல்தான் நரைத்தாலும் வாழ்வில் வலிமை இழக்காதவள்,

பேரனைப் பெற்றாலும் போருக்குத் துஞ்சாதவள்,

பேரிளமவள் பெண் இலக்கணத்தை வித்திட்டவள்

 

பார் போற்றும் மாதர்தனை பலர் தூற்றி,

பாஞ்சாலி வம்சம்தான் பெண் குலமென போற்றி,

அவர்தம் அர்ப்பணிப்புக்கு ஈடுதான் உண்டோ ?

அதை அறியாதோர் வாழ்வில் ஆசிதான் உண்டோ ?

 

குறிப்பு : பெண்ணின் பருவப்பெயர்களைக் கொண்டு அவர்களின் அர்ப்பணிப்பை இக்கவிதை மடலில் வரைந்துள்ளேன். வாய்ப்பளித்தமைக்கு  நன்றி, நண்பர்களே.

 

 

 

 

 

 

மாலினி மகேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here