இயங்கலை சமயப்புதிர் போட்டியில் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி

 

கெடா மாநில அளவில் நடைபெற்ற இயங்கலை சமயப்புதிர் போட்டியில் பாடாங் செராய் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதல் நிலை வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய நால்வர் மன்றம் கெடா மாநில ஏற்பாட்டில் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் ஆதரவோடு கடந்த 1-11-2020 முதல் 12-12-2020 வரை 5 வாரங்கள் இயங்கலை சமயப்புதிர் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியில்
இம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொண்டன.

நேற்று முன் தினம் சுங்கைப்பட்டாணி ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் இயங்கலை சமயப்புதிர் போட்டியில் கல்ந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வு கெடா மாநில நால்வர் மன்றத்தின் தலைவி திருமதி பரிமளாதேவி கிருஷ்ணன் தலைமையில் மலேசிய நால்வர் மன்றத்தின் தேசியத் தலைவர் பெரிய புராணச்செல்வர் சிவ பாலகிருஷ்ணன் கந்தசாமி ஆசியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வில் இறுதிச் சுற்றில் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஏறக்குறைய 37 மாணவர்கள் தங்கள் வெற்றியைப் பதிவு செய்து ரொக்கப் பணமும் நற்சான்றிதழ்களையும்
தட்டிச் சென்றனர். இந்த மாபெரும் இறுதிச் சுற்றில் பாடாங் செராய் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச சேர்ந்த மாணவர்கள் கவிவர்மன் த/பெ முகுந்தன், லோகவர்ஷினி த/பெ ரமேஸ் மற்றும் பிரசாத் த/பெ குனேந்திரன் ஆகிய மூவரும் முதல் நிலை வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு
ரொக்கப் பணம் 300 வெள்ளி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் மூன்றாம் நிலையில் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் கபிலன் த/பெ நீலமன்னன் வெற்றி பெற்று ரொக்கப் பணம் 150 வெள்ளி மற்றும் நற்சான்றிதழ்
வழங்கப்பட்டது.

இயங்கலை சமயப்புதிர் போட்டியில் கலந்து சிறப்பித்த மாணவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை திருமதி ஜீவா, அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளித் தலைமையாசிரியர் குமாரி அல்லி மற்றும் ஆசிரியை திருமதி இரா. பரிமளம் ஆகியோருக்கு கெடா நால்வர் மன்ற ஏற்பாட்டுக்குழு தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

கே. ஆர். மூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here