ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்

நேபிடாவ்:  மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி  ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மியான்மர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மாண்டலே ஆகிய நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
தேசிய ஒற்றுமை தினம் அனுசரிப்பு
இந்த போராட்டம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள், மருத்துவ பணியாளர்கள், ஓரினசேர்க்கை ஆர்வலர்கள், புத்த மதத் துறவிகள், கத்தோலிக்க மத குருமார்கள் என பல தரப்பினரும் இந்த போராட்டத்தில் கை கோர்த்துள்ளனர். இது ராணுவ அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மியான்மரில் நேற்று தேசிய ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் மக்கள் ஜனநாயகத்தை விரும்பினால் போராட்டத்தை கைவிட்டுவிட்டு ராணுவத்துடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்‌‌.
ராணுவத்துடன் கைகோர்க்க அழைப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில்,“ஜனநாயகத்தை வெற்றிகரமாக அடைவதற்கு ராணுவத்துடன் கைகோர்த்து கொள்ளுமாறு ஒட்டுமொத்த தேசத்தையும் நான் தீவிரமாக கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஒற்றுமையால் மட்டுமே இறையாண்மையின் நிலைத்தன்மையை உறுதிபடுத்த முடியும் என்பதை வரலாற்றுப் படிப்பினைகள் நமக்கு கற்பித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உணர்ச்சியால் தூண்டப்பட்டவர்கள் ஆவர். எனவே உணர்ச்சியில் கவனம் செலுத்தாமல் நாட்டுக்காக வேலை செய்யும்படி மீண்டும் அவர்களை வலியுறுத்துகிறேன் என்றார்.
மேலும் அவர் கொரோனா வைரசின் ஆபத்துகளை சுட்டிக்காட்டி மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தினார்.
ஆனாலும் ராணுவ தலைவரின் அழைப்பை புறக்கணித்த மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பேரணியாக சென்றனர். இந்த போராட்டங்கள் மற்றும் பேரணிகள் வழக்கம்போல் அமைதியாகவே நடந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here