உணவகங்களில் மேஜையின் அளவிற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு உணவக உரிமையாளர்களாகிய எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி தய்யூப்கான் (டத்தோ அலி மாஜு) தெரிவித்தார்.
ஆனால் மகிழ்ச்சி பாதியளவு மட்டுமே எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஏனெனில் கடந்தாண்டு தொடங்கிய கோவிட் தொற்றினால் வியாபாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது என்பதனை அனைவரும் அறிவர்.
அதனால் எங்களின் சில கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்று டத்தோ அலி மாஜு கோரிக்கையை முன்வைத்தார்.
முதல் கோரிக்கையாக உணவக நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க வேண்டும். அடுத்ததாக நாங்கள் தொழிலாளர்கள் பிரச்சினையை எதிர்நோக்குகிறோம். சில வேலைகளுக்கு உள்நாட்டினர் வர விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக வீட்டு வேலை, உணவகங்கள், ஜவுளிக்கடை, சலவைத் தொழில் உள்ளிட்ட சில வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான செலவினை முதலாளிகளாகிய நாங்களே ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம். ஏனெனில் வியாபாரம் வழக்க நிலைக்கு திரும்பினால் தொழிலாளர்கள் இல்லாமல் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார்.
வேலை பர்மிட் இல்லாமல் இருப்பவர்களை சட்டப்பூர்வ தொழிலாளர்களாக்கி கொள்ள மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருந்தார்.
இப்பொழுது அதற்காக அனுமதியை பெற்று தந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதோடு உணவகங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்கு அனுமதி பெற்று தருமாறு டத்தோ அலிமாஜு கேட்டுக் கொண்டார்.