படப்பிடிப்பில் விபத்து

–  ஃபகத் பாசிலுக்கு காயம்

‘மலையன் குஞ்சு’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஃபகத் பாசிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் பாசில். இவருடைய நடிப்பில் ‘மாலிக்’, ‘ஜோஜி’, ‘பாட்டு’, ‘மலையன் குஞ்சு’ உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ‘மாலிக்’ திரைப்படம் மே 13- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ‘மலையன் குஞ்சு’ படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதற்காக உயரத்திலிருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் ஃபகத் பாசிலுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஃபகத் பாசில். அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி முதலுதவி அளித்துள்ளனர். பின்பு, ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ‘மலையன் குஞ்சு’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

‘மலையன் குஞ்சு’ படத்தை ஃபகத் பாசில் தந்தை பாசில் தயாரித்து வருகிறார். சஜிமோன் பிரபாகரன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு மகேஷ் நாராயணன் கதை எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, அர்ஜுன் பென்னுடன் இணைந்து ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் மகேஷ் நாராயணன்.

‘டேக் ஆஃப்’, ‘சி யூ சூன்’, ‘மாலிக்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஃபகத் பாசில் – மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் 4- ஆவது படமாக ‘மலையன் குஞ்சு’ உருவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here