கோவிட்-19 கொடுந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டுமா? நிலையான, நீண்ட கால, யதார்த்த அணுகுமுறையால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும்.
கொரோனா கிருமித் தொற்று சங்கிலியை அறுத்தெறிவதற்கு ஒரே சீரான நடவடிக்கைகள் அவசியமாகிறது. அநாவசியமான தலையீடுகள், ஆரோக்கியமற்ற அரசியல் தலையீடுகள் முதலில் வேரறுக்கப்பட வேண்டும்.
அரசியல் மயமாக்குதல், அரசியலாக உருவகப்படுத்துதல் போன்றவை இந்தப் போரில் பெரும் தொல்லையாகவும் இடையூறாகவும் இருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
கல்வியில், விளையாட்டில், வேலைவாய்ப்பில், உயர்கல்வி இடங்கள் ஒதுக்கீட்டில்தான் அரசியல் சதுரங்க ஆட்டம் தலைநீட்டுகிறது என்றால் படுபயங்கர உயிர்கொல்லியாக மாறிவரும் கொரோனா
பெருந்தொற்றுக்கு எதிரான போரிலும் அரசியல் எட்டிப் பார்ப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியமானது அல்ல.
மேலும் இதன் தொடர்பான நடவடிக்கைகள், திட்ட முன்னெடுப்புகள் ஒரே சீராக இருக்க வேண்டும். தவிர, யார் நினைத்தாலும் தலையிடலாம் – மாற்றலாம் என்ற ஊடுருவல்கள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.
மருத்துவ அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள் மிகக் கடுமையான மன உளைச்ங்லுடன் ஓய்வில்லாமல் பாடாற்றி வருகின்றனர். அரங்ாங்கமும் அயராது அதன் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
ஆனால், தங்களது அரசியல் லாபத்திற்காகவும் பதவிக்காகவும் முன்னுக்குப் பின் முரண்படும் கொள்கைகள் அமலாக்கம், சீரற்ற திட்டங்களை அமல்படுத்தும் அரசியல்வாதிகளால் ஒட்டுமொத்த வடிவமைப்புகளும் சீர்குலைந்து போவதற்குக் காரணமாகவும் பெரும் இடையூறாகவும் இருக்கிறது.
கோவிட்-19 கொடுந்தொற்றுக் கிருமி பரவுதலைத் தடுக்கும் முறைகளைக் கையாள்வதில் நாடு தவறான இலக்கில் பயணிக்கிறது என்று 74 விழுக்காடு மலேசியர்கள் நம்புகின்றனர். உலக அளவில் இந்த அளவு 42 விழுக்காடாக இருக்கிறது.
அதிவேகத்தில் அதிகரித்து வரும் புதிய தொற்றுப் பாதிப்புகளின் எண்ணிக்கை அபாயச் சங்கொலியை எழுப்பும் மரணச் சம்பவங்கள் எண்ணிக்கை மக்களின் நம்பிக்கை இழப்புக்கு முழுமுதற்காரணமாக இருக்கிறது.
நாட்டின் சுகாதாரக் கவனிப்பு வடிவமைப்பே சரியும் நிலையில் இருப்பதாகவே பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர்.
ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ – வேறுபாடுகள் இன்றி ஒத்த மனத்துடன் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் களமிறங்க வேண்டும். மலேசியாவைக் காக்கும் போராகவே இது கருதப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் துறைகள், அரசு , அரசு சாரா இயக்கங்கள், தேசப்பற்றுள்ள இளைஞர் இயக்கங்கள் இதில் நேர்கொண்ட பார்வையுடன் இணைய வேண்டும்.
ஒரே சீரான, ஒரே பார்வையுடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமே களத்தில் இறக்கப்பட வேண்டும். நிலையான, யதார்த்தமான நீண்ட கால பலன்களைத் தரக்கூடிய வகையில் அத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
இந்த இலக்கில் நாடு வெற்றிபெற வேண்டும் என்றால், அசிங்கமான அரசியல் விளையாட்டுகளுக்கு மத்திய அரசாங்கம் இடம்தரவே கூடாது.
அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் நாடும் மக்களும் இதுநாள் வரையில் சந்தித்த கேவலங்களும் துன்பங்களும் போதும். இனியும் இக்கொடிய நிலை தொடர வேண்டாம்.
எதிர்க்கட்சிகளில் உள்ள நிபுணர்களும் அறிவாளிகளும் மலேசியர்களே. அவர்களின் சேவைகளைப் பெறுவதற்கு மத்திய அரசாங்கம் வெட்கப்படவே கூடாது – தயங்கவும் கூடாது.
அதே சமயத்தில் கோவிட்-19 தொடர்பான போலி தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிவரும் வஞ்சகர்களையும் அரசாங்கம் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் பரப்பும் நஞ்சு மக்களின் சிந்தனைகளை செல்லரித்துவிடக்கூடாது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் போரில் மலேசியர்களாக கரங்கள் இணைப்போம். தொற்றுச் சங்கிலியை சுக்குநூறாக அறுத்து நொறுக்குவோம்.
– பி.ஆர். ராஜன்