களையெடுக்கும் நேரம் கனிந்துவிட்டது

பதிலடி கொடுப்பீர்!

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கும் விஷமிகளுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் முயற்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாகவும் இடையூறாகவும் இருக்கும் இந்த விஷமிகளுக்குச் சரியான தண்டனை தந்து அவர்களின் இந்த விபரீத விளையாட்டுக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு உரிய காலம் கனிந்துவிட்டது.

இனிமேலும் பொறுமை காக்காமல் இந்தப் புல்லுருவிகளைக் களையெடுப்பதற்கு அரசாங்கம் தயங்கக்கூடாது. தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்களைத் தவறான தகவல்களால் திசைதிருப்பி விடுகின்றவர்களின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல்களை அள்ளி வீசீபவர்களை 1848 நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை கீழறுப்பவர்களை இனியும் விட்டு வைத்தால் மக்களைக் குழப்பும் இந்த விஷமிகளின் திட்டம் தொடரும் வாய்ப்புள்ளது.

பொய்த் தகவல்களால் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களை விதைப்பதோடு அசெளகரியத்தையும் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. குட்டையைக் குழப்பி மக்கள் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும் வகையிலும் அவர்கள் தூண்டிவருகின்றனர்.

அவதூறு பரப்புகின்றவர்களை யார், எவர் என்று பார்க்காமல் நாடு  மக்கள் நலன்களை முன்னிருத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் பாய வேண்டும்.

அதேசமயத்தில் இந்த விஷமிகளுக்குப் பதிலடி தரும் வகையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துகளையும் தெளிவுரைகளையும் திரட்டி பெரிய அளவில் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

கொடூர கிருமித் தொற்றின் வீரியத்தை அடக்கி மக்களைக் காப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இந்தத் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைச் சிறுமைப்படுத்தி பலவீனமாக்கும் விஷமிகளுக்கு எதிராக கடுமையான போக்கும் நடவடிக்கையும் அவசியமாகும். இது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அவதூறுகளாலும் பொய்த் தகவல்களாலும் பலவீனப்படுத்துபவர்களுக்கு எதிராக 1848 நிந்தனைச் ங்ட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் என்று பிரதமர் துறையில் நீதி அமைச்ங்ராகப் பொறுப்பு வகிக்கும் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் அண்மையில் கூறியிருந்தார்.

சரியான நேரத்தில் சரியான ஒரு முடிவை அமைச்சர் பிரதிபலித்திருக்கிறார். இன்டர்நெட், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்த் தகவல்களை மக்கள் எளிதாக நம்பிவிடுவதுதான் பிரச்சினையின் ஆணிவேராக இருக்கிறது.

உண்மையைவிட பொய் வலிமை பெற்றிருக்கிறது. கருத்துச் சொல்லும் உரிமையை இந்த விஷமிகள் மிகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களையும் அவர்கள் உணர்வதாக இல்லை.

வழங்கப்பட்டிருக்கும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் இனியும் சகித்துக்கொள்ளக்கூடாது. தடுப்பூசிக்கு எதிரானவர்களைத் தண்டிப்பதும் இவர்களுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான தெளிவுரைகளும் பிரச்சாரமுமே மிகச் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என சமூகப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை கூறியிருப்பதையும் அரசாங்கம் அதன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரிய அறிவாளிகள், நிபுணர்கள் என்ற நினைப்பில் இந்த விஷமிகள் அள்ளித் தெளிக்கும் பொய்களை அரங்ாங்கம் முறியடிக்க வேண்டும் – சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

இதில் பெரிய எண்ணிக்கையில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். இவர்களை இனியும் விட்டுவைத்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்துதான்.
அதுமட்டுமல்லாது தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தோல்வி கண்டுவிடும். மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். பொருளாதாரமும் பெரும் பாதிப்புகளை விளைவிக்கும்.

அவதூறுகளையும் பொய்த் தகவல்களையும் சரியான நேரத்தில் முறியடிக்கத் தவறினால் நாட்டிற்கும் மக்களுக்கும் கேடுதான்!

விஷமிகளைக் களையெடுப்போம், தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் வெற்றிபெற கரம் இணைப்போம்!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here