உம்மான்னா சும்மா இல்லேப்பா

பிரிட்டன் சுகாதாரத்துறைக்கு  ஓர் இலக்கணப் பாடம்!

இடம், பொருள், ஏவல் என்று தமிழில் இலக்கணம் படித்ததுண்டு. இந்த இலக்கணம் இன்றைய அரசியலுக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது என்றே எண்ணத்தோன்றுக்கிறது. 

பிரிட்டனில் நடந்த சம்பவம் இதற்கு உதாரணமாக இருக்கிறது. வெள்ளையர்களுக்கு முத்தம் என்பது பொது சொத்துபோல் இருக்கும் . அது அவர்களின் கலை, ஆச்சாரம். எங்கும் எப்போதும் முத்தம் கொடுக்கலாம் என்பதும் தெரிந்த செய்திதான் . 

இந்த உம்மாவில்  உயர் நிலையாளர்கள் ஒரு படி உயர்வாகவே இருப்பார்கள்.  ஆனாலும் இன்றைய காலக்கட்டம் அப்படியில்லையே. கொரோனா அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது. அனைவரையும் என்பதைவிட உலக மாந்தர்களை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இந்த வகையில் அரசியல் உயர் நிலையாளர்களுக்கு இடம், பொருள், ஏவல் என்ற இலக்கணம் மிகப்பொருத்தமாய் இருப்பதை ஒரு முத்தம்  தீர்மானித்திருக்கிறது. இதில் ஒரு யுத்தமே நடந்திருக்கிறது. அதாவது பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சரான மாட் ஹான்காக் பொது இடத்தில் தமது பெண் உதவியாளரை இழுத்தணைத்து ஓர் உம்மா கொடுத்திருக்கிறார்  (ஒரு வேளை ரஜினியின் முத்து படம் பார்த்திருப்பாரோ)

இந்த உம்மாவை சும்மாதான் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர் ஒன்றை மறந்துவிட்டு உம்மா கொடுத்ததுதான் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. அதாவது, இடம் அவருக்கு தோதாக அமைய வில்லை என்பதை அவர் உணர மறந்துவிட்டார். ஒரு பொதுநிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த உம்மாவைக் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் என்பதும் மறந்து போனதாகவே இந்த உம்மா அமைந்திருக்கிறது.

கொரோனா பாதிப்பின்போது நெருக்கம் (சமூக இடைவெளி) என்பது தவறு என்று சுகாதாரம் கூறும் போது, சுகாதாரத்துறை அமைச்சர் உதாரணமாகவும் ஓர் எடுத்துக்காட்டாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்?  அவருக்கு மெய் மறந்து போயிற்று  என்பதை பார்வையாளர்கள் சுட்டியபோது சுதாகரித்துக்கொண்ட அவர், மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

அதிபர் போரிஸ் ஜான்சன் மன்னித்தாலும் விடுவார்களா ஊடகத்தார், பொது இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உம்மா கொடுத்தது தவறு என்று கூக்குரல் இட்டதை அதபர் போரிஸ் ஜான்சனால் மறுக்க முடியவில்லை.  மூடி மறைக்கவும்  வழியில்லை. 

அதிபர் போரிஸ் ஜான்சனின் கண்கள் மட்டுமே மாட் ஹான் காக்கிடம்  பேசின. சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் புரிந்துகொண்டார். அந்தப்புரிதல் முன்பே இருந்திருந்தால் ஒரு முத்தம் தவிர்த்திருக்கலாமே! அமைச்சர் பதவியை திரும்ப ஒப்படைக்கும்  கேவலமான நிலை வந்திருக்குமா? 

அதிபர் போரிஸ் ஜான்சனின் பார்வை என்ன சொல்லியிருக்கும்?என்ன மாட் இப்படி பண்ணிட்டிங்களே! அதையெல்லாம் ரூம்லே வச்சுக்கக் கூடாதா? பேசாம ராஜினாமா பண்ணிடுங்க. இல்லேன்னா என் பொழப்புக்கும் வேட்டு வந்துடும் . என் காதலி பிரச்சினையும் பெரிய பிரச்சினயா இருந்து மீண்டு வந்திருக்கேன்” என்றுதானே கூறியிருக்கும்?

ஆமாம் அதுதான் உண்மை. ஓர் உம்மாவுக்கு தண்டனை ராஜினாமா தான் தீர்வு என்றால், சும்மா இருந்திருக்கலாமே” இப்படி  நினைத்தால் காலம் கடந்துவிட்டது கண்ணா! டூ லேட்!

இடம், பொருள், ஏவல் என்பது இப்போதாவது  புரிகிறதா? எதை, எப்போது, எங்கு செய்யவேண்டும் என்று புரியாமல் இருந்தால், கொரோனா சோதனை செய்துகொண்டு இந்தியா போய் இலக்கணம் கற்றுக்கொள்ளத்தான் இந்த ராஜினாமா ! போய் கத்துகிட்டு வா ! அப்புறம் யோசிக்கலாம். வேற வழியே இல்லே! ” என்று போரிஸ் சொன்னாலும் ஆச்சரியப்படப்போவதில்லை. 

உம்மான்னா சும்மா இல்லே கண்ணா! எதையும் யோசிச்சு செய்யணும் என்பதை காலம் கடந்து சிந்திப்பது அரசியலுக்கு ஏற்றதாக இருக்காது. 

முன்னாள் நிதி அமைச்சராக இருந்தவர் சாஜித் ஜாவித் கொள்கைக்காக தமது பதிவியைத் துறந்தவர். அதில் வீராப்பும் விவேகமும் துணிச்சலும்  இருந்தது. அதனால் அவருக்கு மீண்டும் அமச்சரவையில் இடம் கொடுத்து சுகாதாரத்துறைக்கு கொண்டுவந்திருக்கிறார் போரிஸ் ஜான்சன் என்றால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை என்றுதானே அர்த்தம்!

எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா,  நல்லா புரிஞ்சுக்கணும் . ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே! புரிஞ்சுகிட்டா சரி ! இப்படித்தான் மாட் ஹான்காக் முனகிகிட்டு போறாரு. 

ஏதோ தெரியாம உம்மா கொடுத்திட்டீங்க! அமைச்சர் பொறுப்பு போறதுக்குள்ளே போய் கொரோனா சோதனை பண்ணிக்கோங்க. என்னைக்காவது ஒருநாள் போரிஸ் ஜான்சன் மீண்டும் கூப்பிடுவாருன்னு நம்புங்க!

ஆமாம் ! உம்மா கொடுத்தீங்களே ! அதாங்க , அந்த பெண் உதவியாளர எங்கே அனுப்பப போறீங்க . சரி, நமக்கு எதுக்கு வம்பு!   

கற்பனை :  கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here