ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.

தோக்கியோ, ஜூலை 24:

ஜப்பானின் தோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்க பதக்கத்தை சீன வீராங்கனையான யாங் கியான் வொன் வென்றுள்ளார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் (women’s 10 metre air rifle)  போட்டியிலேயே யாங் கியான் வொன் முதல் தங்க பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர்.

இப் போட்டியின் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த நோர்வே நாட்டு வீராங்கனை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

இதன்மூலம் சீனா தோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நாடாக உள்ளது.

இரண்டாவதாக, ரஸ்யாவைச் சேர்ந்த கைலானா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மூன்றாவதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

இதேவேளை தகுதிச்சுற்றில் சீன வீராங்கனை 6 ஆவது இடத்தையும், ரஸ்ய வீராங்கனை 7 ஆவது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை 8 ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here