SOP யை பின்பற்ற தவறியதாக, பிரபல நாசிக்கண்டார் உணவகத்திற்கு 10,000 வெள்ளி அபராதம்

ஜார்ஜ்டவுன்: பினாங்கின் மிகப் பழமையான நாசிக்கண்டார்  உணவகத்தில் வார இறுதி நாட்களில் பெருமளவான வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கு SOP பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் போலீஸ் 10,000 வெள்ளி அபராதம் விதித்தது.

லெபு ஹம்பேலில் உள்ள உணவகத்தில், வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், நான்கு தொழிலாளர்கள் தங்கள் MySejahtera செயலி மூலம் வருகையை பதிவு (check-in) செய்யத் தவறியதை போலீசார் கண்டறிந்ததால்,10,000 வெள்ளி அபராதம் வழங்கப்பட்டது.

உணவகத்தின் இயக்குனர் முஹமட் ரியாஸ் சையத் இப்ராகிம் கூறுகையில், வெள்ளிக்கிழமை பிரார்த்தனை இடைவெளியில் இருந்து தொழிலாளர்கள் திரும்பிய பிறகு, நண்பகல் 3 மணியளவில் மூன்று கார்களில் குறைந்தது 15 போலீசார் கொண்ட குழு உணவகத்திற்கு வந்தது.

போலீசார் உணவகத்தை முற்றுகையிட்டது வருத்தமளிக்கிறது, ஏனெனில் உணவகம் ஏற்கனவே மக்களால் நிரம்பியிருந்தது மற்றும் இது வாடிக்கையாளர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது.

“எங்கள் தரப்பில் தவறு இருந்தது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், நாங்கள் உடனடியாக அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டோம். ஆனால் ஒரு சிறிய இடத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் போலீஸ் வருவது வருத்தமாக இருக்கிறது, ”என்றார்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த ஏராளமான வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அவசரத்தில் இருந்ததால், தொழிலாளர்கள் MySejahtera பயன்பாட்டைப் பயன்படுத்தி செக்-இன் செய்ய மறந்துவிட்டதாக அவர் கூறினார்.

தங்களின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக கடையை மூட முடிவு செய்ததாக ரியாஸ் கூறினார். இருப்பினும், கோலாலம்பூர் போன்ற தூர இடத்திலிருந்து வந்ததால் கடையை திறந்து வைக்குமாறு காத்திருந்த பல வாடிக்கையாளர்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.

பின்னர் மாலையில் சிறிது நேரம் உணவகத்தை மூட தாம் முடிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

உணவகத்தில் 20 தொழிலாளர்கள் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மற்றும் அவர்களில் பாதிப்பேரே வேலையில் உள்ளனர் என்றார்.

சுகாதார இயக்குநர் ஜெனரலால் வழங்கப்பட்ட SOP களுக்கு இணங்கத் தவறியதற்காக 10,000 வெள்ளி அபராதம் வழங்கப்பட்டது.

இந்த அபராதம் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் நடவடிக்கைகள்) (தேசிய மீட்பு திட்டம்) விதிமுறைகள் 2021 ன் விதி 16 ன் கீழ் வழங்கப்பட்டது.

வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைவர் சோஃபியன் சாண்டோங் இது பற்றிக் கூறும்போது, அனைத்து வணிக நடத்துநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் SOP களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

“இந்த SOP கள் ஒன்றும் புதிதல்ல, காவல்துறை அவ்வப்போது அனைத்து விற்பனை நிலையங்களிலும் சோதனைகளை நடத்தும்,” என்றும் அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

 

-எஃப். எம். டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here