ஈராக் பிரதமரை கொல்ல முயற்சி…. ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்.. தேர்தல் முடிவு காரணமா?

ஈராக் பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்டவர் முஸ்தபா அல் கதிமி. ஈராக் பிரதமரை கொலை செய்யும் முயற்சியாக அவரின் வீட்டில் வெடி பொருட்களை அடங்கிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக் பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்டவர் முஸ்தபா அல் கதிமி. முந்தைய பிரதமர் மற்றும் அவருடைய அமைச்சரவையை கலைக்கக்கோரி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றதனால், ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த முஸ்தபா அல் கதிமி பிரதமராக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 10ம்தேதி ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஈராக் பாராளுமன்றத்தில் ஏற்கனவே பலம் வாய்ந்தவையாக திகழ்ந்த ஈரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் இந்த தேர்தலில் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஈரான் ஆதரவு அமைப்புகள் தலைநகர் பாக்தாத்தின் உயர் பாதுகாப்புமிக்க பச்சை மண்டலப் பகுதியில் போராட்டத்தில் குதித்தன.

கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் இந்த போராட்டத்தை ஒடுக்க முயன்ற போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்கா கண்டனம்:

தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொதுத்தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமியை கொலை செய்யும் நோக்கோடு, பாக்தாத்தில் உள்ள அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடந்திருக்கிறது.

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அல் கதிமி தப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதனை ஈராக் ராணுவமும் உறுதி செய்துள்ளது. மேற்கொண்டு தகவல்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.  ஈராக் பிரதமரை கொலை செய்யும் முயற்சியாக ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்புமிக்க பகுதி:

பாக்தாத் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பச்சை மண்டலப் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலின் போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டதாக சில தூதரக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். பிரதமர் இல்லம் மீதான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எந்தவித தீவிரவாத அமைப்பும் தற்போது வரை இதற்கு பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here