அரச குத்தகை பெறுவதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதற்காக ஒப்பந்ததாரர் ஒருவருக்கு 36,000 வெள்ளி அபராதம்

கோத்தா கினபாலு, நவம்பர் 15 :

சமைத்த உணவை வழங்குவதற்கான 3.1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள அரசாங்க குத்தகையை பெறுவதற்காக போலி வங்கி அறிக்கைகளைப் பயன்படுத்தியதற்காக ஒப்பந்ததாரருக்கு 36,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறின் அவர் 12 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ஆடாம் ஷா முஹமட், 44 என்ற குற்றம் சாட்டப்பட்டவர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அபு பக்கர் மனாத் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், தண்டனைச் சட்டத்தின் 471 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதுடன் அதே சட்டத்தின் 468 வது பிரிவின் கீழ் அக்குற்றம் தண்டனைக்குரியதாகும்.

இது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்க வழிசெய்கிறது.

ஜூலை 31, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 30, 2016 தேதியிட்ட டயாங் எண்டர்பிரைஸ் என்ற பெயரில் போலியான வங்கி கணக்கறிக்கையைப் பயன்படுத்தி, தவாவ் தொழிற்கல்லூரி விடுதிக்கு சமைத்த உணவை மார்ச் 1, 2017 முதல் பிப்ரவரி 28 , 2019 வரையான ஒப்பந்தக் காலத்திற்கு வழங்குவதற்கான குத்தகையை பெற்றுள்ளார்.

இங்குள்ள சபா கல்வித் துறையில் நவம்பர் 24, 2016 அன்று குற்றங்கள் நடந்தன.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா RM12,000 அபராதம், தவறினால் நான்கு மாத சிறை விதிக்கப்பட்டது.

குற்றவாளி தரப்பு குற்றத்தை தணிக்கும் வகையில், ஆடாம் தனது ஆலோசகர் மூலம் தனது தவறுகளை ஒப்புக்கொண்டதாகவும் தற்போது வருந்துவதாகவும் கூறி தனக்கு மென்மையான தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.

இதற்குப் பதிலளித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி நோர்ஷாம் சஹரோம், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குத்தகை 3,132,000 வெள்ளி மதிப்புடையது என்றும், அவரது நடவடிக்கைகள் குத்தகையைப் பெறத் தகுதியான பிற நிறுவனங்களின் உரிமைகளை மறுத்துள்ளன என்றும் கூறி தகுந்த தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here