பண்டார் சிகாமாட்டில் ரயிலில் அடிபட்டு ஒருவர் மரணம்!

சிகாமாட், பிப்ரவரி 15 :

இங்குள்ள பண்டார் சிகாமாட்டில், கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

KTMB ரயில் பாதையில் மாலை 5.50 மணியளவில் நடந்த விபத்தில், பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசியான 60 வயதுடைய ஆடவர், பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சிகாமாட் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் (PPgB) முஹமட் ஹாசிம் அப்துல் ரசாக் இதுபற்றிக் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பில், மாலை 6 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, 5 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறினார்.

” தகவல் கிடைத்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவர் ரயில் தண்டவாளத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

கேமாஸில் இருந்து ஜோகூர் பாரு நோக்கி வந்த KTMB பயணிகள் ரயிலில் அவர் மோதியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

“பாதிக்கப்பட்டவரது சடலம் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6.20 மணிக்கு மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் பஹ்ரின் முகமட் நோஹ் இதுபற்றிக் கூறுகையில், ஆரம்ப போலீஸ் விசாரணையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here