கோல திரெங்கானு, மார்ச் 1 :
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 319 SPM தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்கள் முறையாக தேர்வு எழுதுவதை உறுதி செய்வதற்காக மற்ற தேர்வு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மாநில ஷரியா அமலாக்கம், கல்வி மற்றும் உயர்கல்வி சங்கத்தின் தலைவர் சதிஃபுல் பஹ்ரி மாமட் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உலு திரெங்கானு மாவட்டத்தில் 3 மற்றும் கேமாமனில் ஒன்றுமாக மொத்தம் நான்கு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
உலு திரெங்கானுவில், SMA மஹ்முடியாவிலிருந்து 131 மாணவர்கள் SMA (Atas) சுல்தான் சைனால் அபிடின், கோல திரெங்கானுக்கு மாற்றப்பட்டனர்; SM இம்தியாஸ் உலு திரெங்கானுவிலிருந்து 63 மாணவர்கள் SM இம்தியாஸ் கோல திரெங்கானுக்கு மாற்றப்பட்டனர்; மற்றும் மதரஸா மாடன், உலு திரெங்கானுவிலிருந்து 41 மாணவர்கள் கோல திரெங்கானுவில் உள்ள SMA கைரியாவுக்கு மாற்றப்பட்டனர் என்றார்.
“மேலும் கேமாமனில், SMK ஆயிர்பூத்தேயிருந்து 84 மாணவர்கள் SMK செனேஹ பாருவுக்கு மாற்றப்பட்டனர்,” என்று கூறினார்.
நாளை முதல் நடைபெறவுள்ள SPM 2021 தேர்வினை, மொத்தம் 18,815 மாணவர்கள் திரெங்கானு முழுவதுமுள்ள 170 மையங்களில் தேர்வு எழுதுவார்கள் என்றும் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட SPM மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையான பள்ளி சீருடைகள் இல்லாதது போன்றவற்றில், வெள்ளப் பேரழிவு காரணமாக அவர்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டதாக சதிபுல் பஹ்ரி கூறினார்.