விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாரா நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள ஷார்ஜா சென்று விட்டு விமானத்தில் மும்பை திரும்பினார். இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி ஒரு மணிநேரம் வரை சோதனையிட்டனர் என செய்திகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.

இதற்கு சுங்க இலாகா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது மேலாளர் பூஜா டட்லானி மற்றும் 3 பேர் கொண்ட குழுவினர் மும்பை விமான நிலையத்தில் நேற்று காலை வந்திறங்கினர். வழக்கம்போல், நடிகர் ஷாருக் கான் மற்றும் குழுவினரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது ஷாருக் கானின் பாதுகாவலர் ரவி சங்கர் சிங்கின் பையில் 2 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் மற்றும் 5 கைக்கெடிகாரங்களின் காலியான மேலுறைகள் இருந்தன.

அவற்றின் மதிப்பு ரூ.17.86 லட்சம் என்பது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய சுங்க வரி செலுத்தவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் கைக்கெடிகாரங்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என்று மட்டும் நடிகர் ஷாருக் கானிடம் கூறியுள்ளனர்.

 

அதற்கு ஷாருக் கானின் குழுவினர் ஒப்பு கொண்டனர். தொகையை செலுத்துவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடும்படி மட்டும் ஷாருக் கான் கேட்டு கொள்ளப்பட்டார். அவரை பிடித்து வைக்கவும் இல்லை. அவரிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. அதன்பின்னர், நடிகர் ஷாருக் கான், மேலாளர் பூஜா டட்லானி உடனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விட்டனர். அவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொது விமான நிலைய முனையத்தில் வரி செலுத்தும் கவுன்ட்டர் செயல்படவில்லை. இதனால், அதிகாரிகள் ஷாருக் கானின் மெய்க்காவலர் ரவி சங்கர் சிங்கை 2-வது சர்வதேச விமான நிலைய முனையத்துக்கு அழைத்து சென்றனர். சிங்கின் பெயரில், ரூ.6.88 லட்சம் (38.5 சதவீதம்) சுங்க வரி செலுத்தப்பட்டது. அதன்பின்பு அவர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here