லலித் மோடி லண்டன் மருத்துவமனையில் அனுமதி

ஐ.பி.எல். என்று அழைக்கப்படுகிற இந்திய பிரிமியர் லீக்கின் தலைவராகவும், கமிஷனராகவும் விளங்கியவர் லலித் மோடி (வயது 59). இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் இவர் மீது இங்கு ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக அவர் லண்டனுக்கு  தப்பினார். சில மாதங்களுக்கு முன்பாக நடிகை சுஷ்மிதா சென்னுடன் தான் நெருக்கமாக உள்ள படங்களை லலித் மோடி வெளியிட்டு அவை வைரலாயின.

தற்போது லலித் மோடி 2 வாரங்களில் இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்; நிமோனியாவாலும் அவதியுற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) செலுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- இன்புளூவன்சா, நிமோனியா ஆகியவற்றுடன் 2 வாரங்களில் இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அத்துடன் வெளியேற பல முறை முயற்சித்தேன். கடைசியில் 2 டாக்டர்களுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக லண்டனில் தரையிறங்கினேன். பயணம் சுமுகமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இன்னும் எப்போதும் ஆக்சிஜன் உதவியுடன்தான் இருக்கிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here