நங்கநல்லூரில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்; குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரவிழா விழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் மூவரசம்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

இதற்காக அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர், காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சாமி சிலையை பல்லக்கில் வைத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக மூவரசம்பட்டு குளத்துக்கு கொண்டு சென்றனர். சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்த குளத்தில் அதிக அளவில் சேறும்சகதியும் நிறைந்து இருந்தது. எனவே தன்னார்வலர்கள் 25 பேர் முதலில் குளத்தில் இறங்கி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த பாதுகாப்பு வளையமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சங்கிலிபோல் நின்று கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் 5 பேர் பல்லக்கில் இருந்த சாமி சிலையை ஒருவர் கையில் தூக்கிக்கொள்ள, மற்றவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஒன்றாக குளத்தில் இறங்கினர். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ச்சகர்கள் கையில் இருந்த உற்சவர் சாமி சிலையுடன் குளத்தில் நீராடினர்.

இவ்வாறு 3 முறை அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் மூழ்கி எழுந்தனர். நீரில் மூழ்கி 5 பேர் பலி 3-வது முறையாக சாமி சிலையுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கியபோது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலி போல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர், திடீரென நிலைதடுமாறி குளத்தில் இருந்த சேற்றில் கால் வைத்து விட்டார். இதில் சிக்கி அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தன்னார்வலர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரை காப்பாற்ற முயன்றனர். கண்இமைக்கும் நேரத்தில் அவர்களும் அடுத்தடுத்து சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர். இவ்வாறு அடுத்தடுத்து 5 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

அவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியாததாலும், சேற்றில் சிக்கியதாலும் இந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் உள்பட மற்ற அனைவரும் பதறி அடித்துக்கொண்டு கரைக்கு திரும்பி வந்தனர். ஆனால் யாராலும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் பொதுமக்களில் சிலர் குளத்தில் மூழ்கிய 4 பேரின் உடல்களை மீட்டனர். ஆனால் ஒருவர் உடல் மட்டும் நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ரப்பர் படகு உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி பலியான 5-வது நபரின் உடலையும் மீட்டனர். பலியான 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here