சிரியாவில் இருந்து ராக்கெட் தாக்குதல்: பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுத்த இஸ்ரேல்…!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன.

அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, இஸ்லாமிய மதத்தினரின் புனித மாதமான ரமலான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா மசூதியில் கடந்த 5ம் தேதி இரவு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

அல் அக்சா வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் அமைந்துள்ளதால் அங்கு வழிபாடு நடத்த இஸ்ரேலியர்கள் இந்த வழியாக செல்வது வழக்கம். அப்போது, இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும். அதேவேளை, கடந்த 5-ம் தேதி அல் அக்சா வழிபாட்டு தலத்தில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்திய நிலையில் முகமூடி அணிந்த சிலர் இரவு முழுவதும் வழிபாட்டு தலத்திற்குள் தங்கியுள்ளனர். அவர்கள் கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் மறைத்து வைத்திருந்தனர். அதேவேளை மறுநாள் (கடந்த 6-ம் தேதி) காலை யூதர்கள் டெம்பிள் மவுண்ட் வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், 5-ம் தெதி இரவு அல்-அக்சா மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கு தங்கி இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடையே அல் அக்சா வழிபாட்டு தலத்தில் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டது. இந்த மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படையினர் கைது செய்தனர்.

அல் அக்சா வழிபாட்டு தல மோதலையடுத்து பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்தபோது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் ராக்கெட்டுகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இதனை தொடர்ந்து லெபனான் நாட்டில் இருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹமாஸ் ஆயுதக்குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இந்நிலையில், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் இருந்து 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள் நடுவானில் வீழ்த்தியது.

சிரியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பீரங்கி மூலம் சிரியா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here