சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வணிகங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம்

வாட்ஸ்அப் வழியாக கட்டணம் செலுத்தும் புதிய அம்சம் மே 9 வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமானது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணைக் கொண்ட சிங்கப்பூர்வாசிகள் தங்கள் வாட்ஸ்அப் மூலம் கடன் அட்டை, வங்கி அட்டை அல்லது PayNow பயன்படுத்தி பணம் செலுத்த இந்த அம்சம் உதவுகிறது.

பயனாளர்களும் வணிகங்களும் தங்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய வெளிப்புற இணையத்தளம் அல்லது பயன்பாட்டிற்குச் செல்லாமல் நேரடியாக வாட்ஸ்அப்பில் வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் தற்போதைக்கு சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சில வணிகங்களுக்கு இச்சேவையை அனுமதிக்கிறது. இனிவரும் மாதங்களில் இங்குள்ள மேலும் பல நிறுவனங்களுக்கு இச்சேவை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவையைப் பயன்படுத்தும் உள்ளூர் வணிகங்களில் தாவர அடிப்படையிலான ‘இறைச்சி’ உணவுகளை விற்கும் ‘ Love Handle’, ‘gym no excuses’, ‘lifestyle boutique Tye Tye’, ‘pastry shop Baker’s 13’ ஆகியவை அடங்கும்.

ஒரு பரிவர்த்தனையில் பயனாளர் எவ்வளவு தொகையையும் செலுத்தலாம். சேவைக்குக் கட்டணம் இல்லை என்று வாட்ஸ்அப் நிறுவனப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

தொகை செலுத்தப்பட்டதை உறுதி செய்ய, பயனாளரின் வாட்ஸ்அப் பக்கத்தில் “உங்கள் கட்டணத்திற்கு நன்றி” எனும் வாசகம் இடம்பெறும். செயலியில் உள்ள ‘ஆர்டர்’ விவரங்கள் பிரிவின் ‘பேமண்ட்’ விவரங்களில் தங்கள் பரிவர்த்தனையை பய னாளர் சரிபார்க்கலாம்.

“சிங்கப்பூரில் உள்ள மக்களும் வணிகங்களும் வாட்ஸ்அப்பில் இணையும் முறையை இந்த தடையற்ற, பாதுகாப்பான அனுபவம் மாற்றியமைக்கும்,” என்று வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் நிதித் தொழில்நுட்பத் தலைவர் ஸ்டீபன் காஸ்ரியல் கூறினார்.

கட்டணப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், தொழில்துறை தரவு பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்கும் நம்பகமான கட்டணப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக வாட்ஸ்அப் கூறியது. வாட்ஸ்அப் பயனாளர்களின் சட்டபூர்வ பெயர், விவரங்கள் சரிபார்ப்புக்குத் தேவை என்றும் பேச்சாளர் கூறினார்.

கட்டண சேவை வழங்குநரான ‘ஸ்ட்ரைப்’ புதிய வாட்ஸ்அப் அம்சத்தை ஆதரிக்கிறது. சிங்கப்பூரில் வாட்ஸ்அப் வணிகத் தளத்தைப் பயன்படுத்தும் உள்ளூர் வணிகங்கள், வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் தெரிவைச் செயல்படுத்தலாம்.

இந்தக் கட்டணச் சேவை பிரேசிலிலும், இந்தியாவிலும் செயல்பாட்டில் இருப்பதாக வாட்ஸ்அப்பின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here