மலேசிய இந்தியர்கள்  பிழியப்பட்ட ஆரஞ்சுகள் 

பி.ஆர். ராஜன் 

  • ஓட்டு முக்கியம் – இந்தியர்கள் முக்கியமல்ல
  • தேசிய நீரோட்டத்தில் ஒதுக்கப்படுகின்றனர்
  • சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை
  • உயர்கல்வியில் விரும்பும் துறைகள் இந்திய மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை
  • அலங்கார வார்த்தைகள் – வாக்குறுதிகள் இனி தேவையில்லை

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவுள்ள 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் குறிப்பாக  4 மாநிலங்களில் இந்தியர்களின் ஓட்டுகள் அவசியமாகின்றது. வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கக்கூடியதாக இவர்களின் ஓட்டுகள் உள்ளன.

ஆனால் தேசிய நீரோட்டத்தில் இருந்து இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர் – ஒதுக்கப்படுகின்றனர். இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு அர்த்தமுள்ள – உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. 

மற்ற சமுதாயத்தினரோடு ஒப்பிடும்போது பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் மலேசிய இந்தியர்கள் பின்தங்கி இருப்பதை ஆழமான – விரிவான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த பூர்வீகக் குடிமக்களுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரமும் சலுகைகளும் சிறந்த பிரதிநிதித்துவமும் மலேசிய இந்தியர்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. மாநில, மத்திய அளவில்  ஏழை இந்தியர்களின் எண்ணிக்கைதான் விஞ்சி நிற்கின்றது.

எது எப்படி இருந்தும் பொதுத்தேர்தலிலும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தியர்களின் ஓட்டுக்குக் களமிறங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போடுகின்றன. 

உருப்படியான திட்டங்கள் இல்லை 

நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகின்றன. அதிகாரத் தரகர்களும் அரசியல்வாதிகளும் இந்தியர்களின் ஆதரவுக்காக மட்டுமே அவர்களை நாடி வருகின்றனரே தவிர இந்த இனத்திற்காக, உருப்படியான – திட்டவட்டமான – ஆக்கப்பூர்வமான மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் கொள்கை அளவில் வகுக்கப்படவில்லை.

இந்நாட்டின் குடிமக்கள், பிரஜைகள் என்று சொல்லிக்கொள்ளும் பெருமைகூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. நாட்டில் பிறந்தும் வளர்ந்தும் நாடற்றப் பிரஜைகளாக பல்லாயிரம் இந்தியர்கள் இன்றளவும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

கேலியும் கிண்டலும் இனத்துவேஷமும் அவர்களை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்கின்றன. சில அரசியல்வாதிகள், தலைவர்கள், மேடைகளில் ஏறி தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்றனர், ஆடுகின்றனர். பிரபல தென்னிந்திய நடிகர்கள் போன்று ஆடைகளையும் அணிந்து கொள்கின்றனர்.  இவை யாவும் ஓட்டுக்கு மட்டுமே.

8 லட்சம் பேரின் நிலை என்ன?

இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முதுகெலும்பாக இருந்தது ரப்பர் தோட்டங்களே. காலப்போக்கில் மேம்பாடு என்ற பெயரில் தோட்டங்கள் விற்கப்பட்டு, துண்டாடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 லட்சம் பாட்டாளிகள் குண்டுமணிபோல் நாடு  முழுவதும் சிதறிப் போயினர்.

மூட்டை முடிச்சீகளுடன், பிள்ளை குட்டிகளுடன் இவர்களுள் பெரும்பாலோர் புறம்போக்கு நிலங்களில் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்தனர். இவர்களின் நிலை என்ன என்பதில் இன்றளவும் யாருக்கும் அக்கறை இல்லை. அரசாங்கத்திற்கும் அதுபற்றி கவலையும் இல்லை. உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனவர்கள் இறந்த பிறகும் இந்த மண்ணில் புதைந்து உரமாக மாறி நாட்டை வளப்படுத்தினர் என்பது வரலாறு. 

இந்தியர்களின் தியாகங்கள் – அர்ப்பணிப்புகளுக்கு அங்கீகாரமே இல்லை 

தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்து சேர்ந்த இந்தியத் தொழிலாளர்கள் காடுகளை அழித்து ரப்பர் மரங்களை நட்டு செல்வச் செழிப்புமிக்க ஒரு நாடாக  மலேசியா வளர்ச்சி பெறுவதற்கும் உலகப் பிரசித்திபெற்ற சாலைகளையும் நெடுஞ்சாலைகளையும் நிர்மாணித்து நாட்டை உருமாற்றியவர்களுக்கு என்னதான் அங்கீகாரம்?

இந்தியர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள், உழைப்புகள் ஆகியவற்றுக்கு மேடைகளில் மட்டுமே புகழாரம் சுட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலையில் இவை எதற்குமே ஓர் உரிய அங்கீகாரமோ மதிப்போ மரியாதையோ கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. இதில் ரகசியம் எதுவும் இல்லை.

உழைத்த சமுதாயத்திற்கு – நாட்டை நிமிர்த்திய ஒரு சமுதாயத்திற்கு முறையான அங்கீகாரத்தை வழங்கி இருந்தால் மற்ற இனங்களுக்கு ஈடாக இந்தியர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்திருக்கும். 

இந்த நிலையில் நாட்டின் 10ஆவது பிரதமரும் அவர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணியில் நடந்து கொண்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கமாவது இந்திய சமுதாயத்திற்கு உருப்படியான திட்டங்களை வகுத்துக் கொள்கைகளாக அரசுப் பதிவேட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

ஆதரவு அலை திசைமாறுகிறதா?

பாரிசான் நேஷனல் காலத்திலும் அடுத்து வந்த பக்காத்தான் ஹராப்பான் காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்து மனமுடைந்து போயிருக்கும் இந்தியர்கள் இப்போது ஒரு புதிய ஒளியைப் பார்ப்பதற்கு டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிப் பக்கம் மெல்லப் பார்வையைத் திருப்பி இருக்கின்றனர். 

இது பெரிக்காத்தான் நேஷனலை அவர்கள் நேசிக்கின்றனர் என்று அர்த்தமாகாது. ஆனால் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிரான ஆட்சேபம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியர்கள் ஏமாற்றத்தின் விளிம்பில் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணம் என்பதை அரசியல் தலைவர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உயர்கல்விக்கு இன்னமும் போராட்டம் 

இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் இன்னமும் பின்தங்கி இருக்கின்ற நிலையில் தங்களின் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்ப வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து இவர்கள் ஒருபோதும் பின்வாங்கியது கிடையாது. பட்டினிக் கிடந்தாவது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதிமனம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

நகை நட்டு,  சிலர் தாலியைக்கூட அடகுவைத்து அல்லது விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். நிலம், வீடுகளும் விற்கப்படுகின்றன அல்லது அடகு வைக்கப்படுகின்றன. பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கி விட வேண்டும் என்ற இவர்களின் ஏக்கக் கனவுக்கும் இதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் – வேறு வழிதான் என்ன?

ஆனால் உயர்கல்வி என்பது அவ்வளவு எளிதாக இந்திய சமுதாயத்தின் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை. தொட்டிலில் இருந்து கல்லறை வரை சவால்களை எதிர்நோக்குகின்றனர். விரும்பும் துறைகளைத் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்புகளும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன்று வரையிலும் இந்நாட்டிற்காக இந்திய சமுதாயம் செய்திருக்கும் பங்களிப்புகள், அர்ப்பணிப்புகள், தியாகங்களுக்கு அர்த்தமே இல்லை.  இந்திய சமுதாயத்தின் நலனைக் காக்க வேண்டிய கடந்தகாலத் தலைவர்கள் செல்வச் செழிப்பில் தங்களை வளப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம். 

ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை  அன்று ரப்பர் மரம் சீவுவதற்காகக் குனிந்தவர்கள் இன்றளவும் நிமரவில்லை. சோதனைகளை மட்டும்தான் அவர்கள் இன்றளவும் சுமந்து கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டைப் பொறுத்தவரை மற்ற இனங்களோடு ஒப்பிடுகையில் அளவுக்கு அதிகமாக இழிவுபடுத்தப்பட்ட ஓர் இனமாகத்தான் இந்தியர்கள் இருக்கின்றனர்.

வேலை வாய்ப்புகளில்கூட இந்தியர்களுக்கு உரிய இடம் இல்லை. ஒரு தொழிற்சாலையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. வேலை என்று சென்றாலே மேலும் கீழும் பார்ப்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது.

உரிமைகள் என்னவாயின?

தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்படாதது மலேசிய இந்தியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். இந்த ஏமாற்றத்தைக் காட்டும் வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்கும் என்று அரசியல்வாதிகளை நம்புகின்றனர். அதிகாரத்தில் உள்ள தலைவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றனர். 

எல்லாம் முடிந்ததும் இறுதியில் ஒரு வட்டத்திற்குள் அவர்கள் மீண்டும் அடைக்கப்பட்டு விடுகின்றனர். சட்டபூர்வமாக தங்களுக்குக் கிடைக்க வேண்டியதை இழந்து நிற்கின்றனர். ரப்பர் மரங்கள் சீவினர், தேயிலை பறித்தனர், சாலைகளை நிர்மாணித்தனர், காடுகளை அழித்தனர். நாடு உயர்ந்து நிற்கின்றது.  அதற்காக உழைத்த இந்தியர்கள் இதனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மற்ற இனங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை அபகரித்து தங்களுக்குக் கொடுங்கள் என்று இந்தியர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தங்களுக்கானதை வழங்கினால் போதும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உயர்கல்விக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் தங்களுடைய வாழ்க்கையை சுயமாக நிமிர்த்துக்கொள்ள முடியும் என்று இந்தியர்கள் நம்புகின்றனர்.

ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம்.  இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படியே போராடிக்  கொண்டிருக்கப் போகின்றனர். மலேசியாவைப் பொறுத்தவரை இந்திய உழைக்கும் வர்க்கத்தினர் பிழிந்தெடுக்கப்பட்ட ஓர் ஆரஞ்சு என்பதில் சந்தேகமே இல்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here