மித்ரா ரொக்க உதவி நிதிக்கு தனியார் உயர்கல்வி பி40 மாணவர்களும் மனு செய்யலாம் முதலில் வருவோருக்கு முதற்சலுகை – டத்தோ ரமணன் தகவல்

அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் பி40 பிரிவு இந்திய மாணவர்கள் போன்று தனியார் உயர்கல்வி மையங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் பி40 பிரிவு மாணவர்களும் ஒரு தடவை உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இரண்டாம், மூன்றாம் அல்லது இறுதி ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் இம்மாணவர்கள் இப்போது முதல் அவர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

முதலில் வருவோருக்கு முதற்சலுகை என்ற அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
வழங்கப்படும் இந்த 2 ஆயிரம் ரிங்கிட் ரொக்க உதவி நிதியானது சம்பந்தப்பட்ட மாணவர்கள் அவர்களின் கட்டணத்தைச் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைப்பதாகவும் இருக்கும். இவர்களின் கல்வி எவ்விதத் தங்கு தடையின்றி நிறைவு பெறுவதை உறுதி ஙெ்ய்வதற்கு மித்ரா இந்த உதவித் தொகையை வழங்குகிறது என்று டத்தோ ரமணன் மேலும் குறிப்பிட்டார்.
பணப் பிரச்சினையால் இவர்களின் கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார். www.mitra.gov.my என்ற அகப்பக்க முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டபோது தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் பி40 மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என மக்கள் ஓசை உடனடியாகப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here