கோலா மூடா:
நேற்று மாலை பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து குருண் பகுதியில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்குள்ள 21 வீடுகள் பாதிக்கப்பட்டன.
கம்போங் சுங்கை குன்யிட், கம்போங் சுங்கை பாடாக், கம்போங் ஜெலடாங், கம்போங் பெலகாங் மஹ்காமா குருண், கம்போங் பெக்கான் அடாப், மற்றும் கம்போங் லாடாங் ஹாக் கிம் ஆகிய ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலா மூடா மலேசிய குடிமைத் தற்காப்பு அதிகாரி அசாஹர் அஹ்மட் தெரிவித்தார்.
அப்பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிலைமை மோசமடைந்தால் அவர்களை தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“குருணில் நேற்று இரவு 10.25 மணி முதல் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்ததை அடுத்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் நீர்மட்டம் 0.3 மீட்டர் முதல் 0.5 மீட்டர் வரை உயர்ந்ததால், தாழ்வான பகுதிகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
“இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
























