6 மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமைக் கூட்டணியின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஆக. 15-

மத்தியில் வலுவான ஆட்சி அதிகாரம் இருந்தும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணி பலத்த அடியை வாங்கி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 149 பேரின் ஆதரவுடன் வலுவான அஸ்திவாரத்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கொண்டிருக்கிறது.

பாரிசான் நேஷனல் குறிப்பாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியுடன் அன்வார் கரங்கோத்த நாளில் இருந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான சரிவு தொடங்கி விட்டது.

இந்த 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமைக் கூட்டணி தோல்வியுற்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை நிராகரிப்பதற்கில்லை. கிட்டத்தட்ட 47 ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டிருக்கும்  ஸாஹிட்டுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது ஒரு பலவீனமாகவே இதுவரை பார்க்கப்படுகிறது.

இந்திய சமுதாயத்தின் ஆதரவில் சரிவு

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான ஆதரவு மிகப்பெரிய அளவில் சரிவு கண்டிருக்கிறது. பாரிசான் நேஷனலுடன்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டுச் சேர்ந்ததற்கே இதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

பாரிசான் நேஷனல் அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்ததால்தான் 2008 தொடக்கம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு கட்டங்கட்டமாகத் திரும்பி 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது.

ஆனால் சரியாக 22 மாதங்களுக்குப் பிறகு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அப்போது துன் டாக்டர் மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் பிரதமராக இருந்தார்.

அப்போது தொடங்கி இந்தியர்களின் நலன்கள் தொய்வு நிலையிலேயே இருந்து வந்தன. நஜிப் வழங்கிய 2,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் இந்த ஆட்சியில்தான் அபகரிக்கப்பட்டது. அதேபோல் அரசீப் பல்கலைக்கழகங்களில்  இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புகளும் நிறைவாக இல்லை. இந்திய மாணவர்கள் கேட்டது ஒன்று, கிடைத்ததோ வேறு என்ற நிலையில் இந்திய சமுதாயம் பெரும் ஏமாற்றத்தில் உழன்றது.

கேட்பார் மேய்ப்பர் இன்றி இந்திய சமுதாயம் அல்லாடிக் கொண்டிருந்தது. இச்சமயத்தில் 2022 நவம்பர் மாதம் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்திய சமுதாயத்தின் ஆதரவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலைவீசியது. இந்தியர்கள் நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பைத் தரும் வகையில் அதன் பக்கம் நின்றனர். கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் தோல்வி கண்டன. அதேபோல் பாரிசான் நேஷனலும் குறிப்பாக அம்னோ படுதோல்வியை இந்தத் தேர்தலில் சந்தித்தது.

ஒற்றுமை அரசாங்கம் மலர்ந்தது

பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய மூன்று கூட்டணிகளில் எதுவுமே தனித்த பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. மூன்று நாட்கள் அரசாங்கம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாட்சிமை தங்கிய பேரரசர் மலாய் ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்தி ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு பரிந்துரை செய்தார்.

இவ்வகையில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஆகிய இரு கூட்டணிகளும் சபா, சரவாக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தன. நாட்டின் 10ஆவது பிரதமராக அன்வார் பொறுப்பேற்றார்.

இந்திய சமுதாயம் மீண்டும் ஏமாந்தது என்பது நிதர்சனம். வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் திக்கற்ற நிலையில் இந்திய சமுதாயம் இருந்தது. வாக்குறுதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டன. ஆனால் அதில் எதுவுமே முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பது வரலாறு.

மெட்ரிகுலேஷன் கல்வி

இந்திய சமுதாயத்தைக் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மெட்ரிகுலேஷன் கல்லூரி இட வாய்ப்புகள் மீண்டும் கேள்விக்குறியாகின. நஜிப் பிரதமராக இருந்தபோது கேட்டதற்கு அதிகமாகவே மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளைத் தந்தார். எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்தனர், எத்தனை பேருக்கு வாய்ப்புகள் தரப்பட்டன என்ற விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஒற்றுமை அரசாங்கம் இந்த விவகாரத்தில் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் எத்தனை பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்தது என்பதற்கு இன்றளவும் பதில் இல்லை.  அதிகாரப்பூர்வ ரகசியகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் உள்ளது என்பது போன்ற ஒரு தோரணை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அரசுப் பல்கலைக்கழகங்களில் கோட்டா முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் அன்வார் திட்டவட்டமான பதிலை அளிக்கவில்லை. மாறாக அதிலும் ஒரு மழுப்பல்தான். தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரால் தைரியமாக அறிவிக்க முடியவில்லை.

கோட்டா முறையை நீக்கினால் இனி எந்தக் காலத்திலும் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் ஜெயிக்காது என்ற ஒரு பலவீனமான பதில் மட்டுமே அவரிடம் இருந்தது. நஜிப் காலத்தில் இவ்வாறு இல்லை. கேட்பதற்கு இல்லை என்றெல்லாம் பதில் கிடையாது. கேட்ட இடத்திலேயே எல்லாம் கிடைத்தது. இவர் மலாய்க்காரர்களை அவர்களது உரிமைகளை ஒரு காரணமாகக் காட்டி மழுப்பாமல் மிகத் தைரியமாகச் செயல்பட்ட ஒரு தலைவராகவே இன்றும் மதிக்கப்படுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தி இருந்தால் முடிவுகள் சாதகமாகி இருக்கும்

2022 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலோடு இந்த 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை நடத்தி இருந்தால் இன்றைய படுதோல்வியையும் பாதிப்பையும் பக்காத்தான் ஹராப்பான் எதிர்கொண்டிருக்காது.

இப்போதுதான் ஓட்டுப் போட்டோம். இப்போது ஏன் மீண்டும் போட வேண்டும் என்ற குழப்பத்தில் அதிகமான மக்கள் இருந்ததும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைந்ததற்கான காரணமாகவும் அமைந்திருந்தது.  மேலும் இந்த ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நாளில் விடுமுறை வழங்கப்படாததும் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வருவதும் குறைந்து  போனது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் இதனை முறையாக வகுத்து நடத்திடுவதில் ஒற்றுமை அரசாங்கம் மொத்தமாகத் தோல்வி கண்டிருக்கிறது. இந்தப் படுதோல்விக்கு பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

உண்டி 18 போட்ட நாமம்

பதின்ம வயதினருக்கு அரசியல் ஞானம் வேண்டும் என்பதற்காக மூடா கட்சியின் தேசியத் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் சிந்தனையில் உருவான   உண்டி 18 எனும் 18 வயதினருக்கான வாக்களிப்பு உரிமைப் பரிந்துரை சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. என்ன நோக்கத்திற்காக சைட் சாடிக் இந்த உரிமையைப் பெற்றுத் தந்தாரோ அதற்கு எதிர்மாறாக மூடா கட்சியை இவர்கள் தோல்விப் படுகுழியில் தள்ளினர்.

பதின்ம வயது வாக்காளர்கள் மூடா கட்சியை மட்டுமன்றி பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளுக்கு சிம்ம சொப்பனமாகி விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர்  வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் 80 விழுக்காட்டினர் பாஸ் கட்சியின் பக்கம் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உண்டி 18 சீன – இந்திய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மலாய்க்காரர்களுள் 10 பேரில் 9 பேர் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களித்து வருங்காலப் பொதுத்தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விட்டது.

இளையோரின் நம்பிக்கையைப் பெறுவதில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணி தோல்வி கண்டிருக்கிறது. அதிலும்  பாரிசான் நேஷனலைக் குறிப்பாக அம்னோவை அவர்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிராகரித்திருக்கின்றனர்.

இந்தப் பதின்ம வயது வாக்காளர்கள் கிளாந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பாஸ் கொடிகளை ஏந்தி பெரும் எண்ணிக்கையில் ஊர்வலம் வந்தது ஒரு புதிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணி தலைதூக்க முடியாத அளவுக்கு அடி வாங்கி இருக்கிறது. இனி வருங்காலங்களில் நடைபெறும் பொதுத்தேர்தல்களிலும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே நிலைதானா? என்ற கேள்வியும்  எழுந்துள்ளது.

அன்வார் மோகம் கலைந்தது

2022 வரை அன்வார் ஒரு தேர்தல் கூட்டத்திற்கு வந்தால் அங்கு பெருந்திரளாகத் திரண்டிருக்கும் ஆதரவாளர்கள் ரிபோர்மாசி என்று எழுப்பும் சத்தம் விண்ணைப் பிளப்பதாக இருக்கும். கூட்டம் அலைமோதும்.

ஆனால் இந்த ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டத்தைக் காண முடியவில்லை. அந்த முழக்கமும் கேட்கவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் அன்வாரைப் பார்த்து முழக்கமிடாமல் அமைதியாக இருந்ததையும் காண முடிந்தது.

அதேபோன்று பிகேஆர் தேசியத் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளும் கூட்டங்களில் ஆதரவாளர்கள் அலை அலையாகத் திரண்டனர். அது ஒரு காலம். ஆனால் இப்போது அந்த அலை ஓய்ந்து விட்டது. ரஃபிஸியின் குரலும் இப்போது எடுபடவில்லை.

செல்வாக்கு வாக்குகளில் ஒற்றுமைக் கூட்டணி முந்தி இருக்கிறது

எது எப்படி இருப்பினும் கிளாந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏககாலத்தில் நடைபெற்ற 15ஆவது சட்டமன்றத் தொகுதித் தேர்தல்களில் செல்வாக்கு வாக்குகளைப் பொறுத்தவரை பக்காத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணி 33 லட்சத்து 99,472 வாக்குகளை அல்லது 49.5 விழுக்காட்டைப் பெற்றிருக்கிறது.

அதே சமயம் பெரிக்காத்தான் நேஷனல் மேலும் அதில் இடம்பெற்றுள்ள பாஸ் கட்சி இணைந்து 33 லட்சத்து 82,455 அல்லது 49.3 விழுக்காட்டு செல்வாக்கு வாக்குகளைப் பெற்றுள்ளன.

இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 17,006 வாக்குகள் மட்டுமே. இது பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்கிறது.

இருப்பினும் மொத்தம் 245 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 146 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. சிலாங்கூரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது. பக்காத்தான் ஹராப்பான் 80 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் 19 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 99 இடங்களை இந்த ஒற்றுமைக் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.

இதே போக்கு தொடருமாயின் 16ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கக்கூடிய பேராபத்தைத் தவிர்க்க முடியாது.

பெரிக்காத்தான் நேஷனலைப் பொறுத்தவரை இனியும் அமைதி காக்காது,  இப்போதிலிருந்து அதன் வியூகத்தைச் செயல்படுத்த தொடங்கும் என்பது நிதர்சனம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here