சூரியனை ஆய்வுசெய்ய ‘ஆதித்யா-L1’ விண்கலனுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV-C57

ஸ்ரீஹரிகோட்டா:

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-L1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஏவப்பட்டத்தில் இருந்து மூன்று படிநிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும். இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலம் 125 நாள்கள் பயணம் செய்து இலக்கை அடையும்.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ளும்.

முன்னதாக, விண்கலத்தை ஏவுவதற்கான 23.40 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை மதியம் 12.10 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், குறிக்கப்பட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here