முடிதிருத்துதல், பொற்கொல்லர், ஜவுளித் துறை: அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி- பிரதமர்

கோலாலம்பூர்:

முடிதிருத்தும் கடைகள், பொற்கொல்லர்கள் மற்றும் ஜவுளித் தொழில் ஆகிய மூன்று துறைகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அங்கீகாரம் அளிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

இருப்பினும், இதற்கு விரைவான தீர்வு காண பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் பாதிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், ஏனெனில் உள்ளூர் மக்களும் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று தான் நம்புவதாக பிரதமர் கூறினார்.

மேலும் “தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVet) நிறுவனங்கள் மூலம் உள்நாட்டினருக்கு பயிற்சி வழங்குவதன் மூலம், இந்த மூன்று துறைகளும் எதிர்நோக்கும் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு நீண்ட கால தீர்வைக் காணலாம்,” என்று பிரிக்ஃபீல்ட்ஸில் Lestari Niaga நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியர்களுக்கு நன்மை தரக்கூடிய இந்த ஒன்றுகூடலை டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒழுங் கமைத்திருந்தார். 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட்டரசுப் பிரதேச, நகர்புற நல்வாழ்வு துணையமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் பிரிக்பீல்ட்ஸின் புதிய தோற்றம் மிகத் துரிதமாக உருவானது. 

இந்தியர்களின் நடமாட்டம் அதிகமுள்ள பிரிக்பீல்ட்ஸ்-இல் வாழும் மக்கள், அங்குள்ள வர்த்தகர்கள், அந்தச் சூழல் அனைத்துமே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று என்று தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்.

எனது கோரிக்கைக்குச் செவிசாய்த்து இந்த அனுமதியை வழங்கிய பிரதமருக்கு இவ் வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here